இன்று முதல் நான் அரசியல் துறவறம் பூணுகிறேன்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
தைலாபுரம்: அரசியல் துறவறம் பூணுவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இனிமேல் பாமகவை டாக்டர் அன்புமணி ராமதாஸே பார்த்துக் கொள்வார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
பாமகவை நிறுவி தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத சக்திகளில் ஒன்றாக அதை மாற்றியவர் டாக்டர் ராமதாஸ். பாமகவை வலிமையான அரசியல் சக்தியாக மாற்றியவர். வன்னியர் சங்கம், அதைத் தொடர்ந்து பாமக என்று தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் தனிப்பெரும் கட்சியாக திகழச் செய்தவர். அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் உயிர்நாடிப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கக் கூடிய சமூகநீதிப் போராளியாகவும் திகழ்ந்தவர் டாக்டர் ராமதாஸ்.
இந்த நிலையில் இன்று தனது அரசியல் ஓய்வை அவர் அறிவித்துள்ளார். தனது 88வது பிறந்த நாளையொட்டி இன்று தைலாபுரத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது அவர் இதுகுறித்துக் கூறியதாவது:
இன்று முதல் அரசியல் துறவறம் பூணுகிறேன். அரசியல் துறவறம் என்று சொன்னால், அரசியல் பேச மாட்டேன், அரசியலுக்கு வழிகாட்ட மாட்டேன். ஆனால் வருகிறவர்களைப் பார்ப்பேன், நலம் விசாரிப்பேன், அவ்வளவுதான். அந்த வகையிலே, அரசியலிலே நான் தலையிட மாட்டேன். அதை அன்புமணி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
என்னுடைய துணைவர்களாக இருக்கிற நிர்வாகிகள் இருக்கிறார்கள், நாங்கள் தொடர்ந்து அங்கிருப்போம். அதனாலே, வருகின்றவர்கள் என்னை பார்க்க வருகின்றவர்கள் பார்த்துவிட்டு, 'ஐயா, நலமா?' என்று கேட்டுவிட்டு செல்லலாம். ஆகையினால் அரசியல் பேசுவதற்கு ஏதுமில்லை என்றால், நான் அரசியல் துறவறம் இன்றிலிருந்து மேற்கொண்டு இருக்கிறேன்.
அந்த வகையிலே இந்த கல்வித் துறையில் மேலும் சிறப்பாக மிகப்பெரிய அளவிலே வளர நீங்கள் எல்லாம் பாடுபட வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். அரசியல் துறவறம் பூண்டு, இன்றிலிருந்து பூணுகின்ற நான் என்னை வந்து தொந்தரவு செய்யாமல் பார்த்துவிட்டு செல்லுங்கள். 'ஐயா, நலமா? எப்படி இருக்கிறாய்? உன் குடும்பம் எப்படி இருக்கு?' அவ்வளவுதான். உங்களுக்கும் எனக்கும் இருக்கிற உரையாடல்.
மற்றபடி அரசியல் எதுவும் பேச வேண்டாம். அரசியல் அது எனக்கு தேவையில்லை. ஏனென்றால் நான் துறவியாயிட்டேன் இன்றிலிருந்து. அதனால், உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி என்றார் டாக்டர் ராமதாஸ்.