பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி

Su.tha Arivalagan
Jan 31, 2026,03:07 PM IST

விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கியுள்ளார்.


தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாமக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இந்த நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து, தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் டாக்டர் ராமதாஸ் நேரடியாக ஈடுபட்டுள்ளார்.




தற்போது பாமக இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ளது. அதோடு யாருடன் கூட்டணி என்பது குறித்தும் ராமதாஸ் இதுவரை முடிவு செய்யவில்லை. ஒருபுறம் டாக்டர் ராமதாஸ் தரப்பு நேர்காணலைத் தொடங்கியுள்ள நிலையில், மற்றொருபுறம் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள அன்புமணி ராமதாஸ் தரப்பும் தேர்தல் வேலைகளில் மும்முரம் காட்டி வருகிறது. ஏற்கனவே அன்புமணி தரப்பினர் விருப்ப மனுக்களை விநியோகித்து, தனியாக நேர்காணல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதனால் பாமக தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.


அன்புமணி ராமதாஸ் தரப்புக்குத் தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கி அனுப்பிய கடிதத்தை ரத்து செய்யக் கோரி டாக்டர் ராமதாஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை மறுநாள் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.நீதிமன்ற விசாரணை இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கி டாக்டர் ராமதாஸ் தனது அரசியல் நகர்வை வேகப்படுத்தியுள்ளார்.


கட்சி மற்றும் கட்சியின் மாம்பழ சின்னம் யாருக்கு என்பதும் இதுவரை முடிவாகவில்லை. யாருடன் கூட்டணி வைக்க போகிறோம், பாமக.,விற்கு எத்தனை தொகுதிகள் என்பதும் முடிவாகவில்லை. இப்படிப்பட்ட சூழலில் ராமதாஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணலை நடத்தி வருவது அனைவரிடமும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை நாளை மறுநாள் கோர்ட் எந்த மாதிரியான உத்தரவை பிறப்பிக்கிறதோ அதைப் பொறுத்து தன்னுடைய அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து செல்லவும், தன்னுடைய முடிவை அறிவிக்கவும் ராமதாஸ் திட்டமிட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.