எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

Meenakshi
Dec 09, 2025,02:16 PM IST

சென்னை: தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்ட ஆவணத்தில் எனது கையெழுத்து போலியாக போடப்பட்டுள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுர தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்ட ஆவணத்தில் எனது கையெழுத்து போலியாக போடப்பட்டுள்ளது. எனது பெயரையோ, படத்தையோ பயன்படுத்தக் கூடாது. வேண்டும் என்றால் அன்புமணி தனிக்கட்சி தொடங்கலாம்.


தேர்தல் ஆணையத்தை எதிர்த்து நாங்கள் வழக்கு தொடுத்திருந்தோம். ஆனால், தானாகவே முன் வந்து பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு வாதிட்டார்கள் அன்புமணியின் ஆதரவாளர்கள். என் கட்சி எனக்கு இல்லை என்று சொல்வதற்கு ஒரு பிள்ளை. சொந்த தந்தையையே எதிர்க்கின்ற இப்படிப்பட்ட ஒரு தலைவர் தமிழ்நாட்டில் பிறந்துள்ளாரே என்று பேசிக்கொண்டுள்ளனர்.




தேர்தல் ஆணையத்தை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தினோம். இப்போது தீர்ப்பும் எங்களுக்கு சாதமாக வந்துள்ளது. பாமகவை உருவாக்கியது நான் தான். கட்சியின் பெயரை சொல்லவோ, சொந்தம் கொண்டாடவோ யாருக்கும் அதிகாரம் இல்லை. ஒட்டு கேட்கும் கருவி வைத்தது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தோம். ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னை பற்றி பேசுவதற்கு உனக்கு எந்த உரிமையும் கிடையாது. நான் உருவாக்கிய பாமகவை அன்புமணி உள்ளிட்ட யாரும் உரிமை கொண்டாட முடியாது என்று தெரிவித்துள்ளார்.