மாம்பழ சின்னம் யாருக்கு?...பாமக வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Su.tha Arivalagan
Feb 02, 2026,02:53 PM IST
சென்னை : பாமக.,வின் மாம்பழ சின்னம் யாருக்கு என தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் கமிஷன் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் பாமக சின்னம் குறித்த விவகாரம் விறுவிறுப்படைந்துள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக, பாமக இரு அணிகளாக பிரிந்தது. தொடர்ந்து அன்புமணி கட்சியின் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து நீக்கப்படுவதாக ராமதாஸ் தலைமையிலான பாமக.,வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்புமணியின் ஆதரவாளர்களையும் ராமதாஸ் நீக்கினார். ஆனால் தானே கட்சியின் தலைவர் என்றும், தனக்கு தான் கட்சி சொந்தம் என்றும், உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரமும் தனக்கு தான் உண்டு என்றும் அன்புமணி கூறி வந்தார்.

இதற்கிடையில் பீகார் சட்டசபை தேர்தல் சமயத்தில், பீகாரில் பாமக போட்டியிடுவதற்காக மாம்பழ சின்னம் கேட்கப்பட்டது. அப்போது அதற்கு எதிராக ராமதாஸ் தரப்பு தேர்தல் கமிஷனுக்கு மனு அளித்தது. இந்த சமயத்தில் அன்புமணி பெயரில் இருக்கும் அலுவலக முகவரியிலேயே கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதால் கட்சியும், மாம்பழ சின்னமும் அவருக்கு தான் என எழுத்து பூர்வமாக அறிக்கை அளித்தது. தேர்தல் கமிஷனின் இந்த முடிவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் ராமதாஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.





கட்சியின் நிறுவனர் என்ற முறையில் கட்சி தனக்கு தான் சொந்தம் என்றும், மாம்பழ சின்னத்தை தன்னுடைய தரப்பை கேட்காமல் அன்புமணி தரப்பிற்கு தேர்தல் கமிஷன் அளித்தது சட்ட விரோதமானது என்றும் அந்த மனுவில் ராமதாஸ் குறிப்பிட்டிருந்தார். பாமக கட்சியும், மாம்பழ சின்னமும் யாருக்கு என்ற வழக்கு கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாம்பழ சின்னத்தை அன்புமணி தரப்பிற்கு ஒதுக்கியது தொடர்பாக 3 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்னும் 3 வாரங்கள் என்றால், அதற்குள் தமிழக சட்டசபை தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் இதுவரை கூட்டணி குறித்து முடிவு செய்யவில்லை என கூறி வரும் ராமதாஸ் தரப்பிற்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்குவதாக உத்தரவு வந்தால், அதற்கு பிறகு எப்படி ராமதாஸ் கூட்டணி முடிவு எடுத்து, தேர்தலை எதிர்கொள்வார் என தெரியவில்லை. ஒருவேளை அன்புமணிக்கு மாம்பழ சின்னம் அளித்தது சரியே என கோர்ட் தீர்ப்பு வழங்கினால், அது ராமதாசுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும். 

அதே சமயம், என்டிஏ கூட்டணியில் ஏற்கனவே இணைந்துள்ள அன்புமணிக்கு மாம்பழ சின்னம் கிடையாது என சென்னை கோர்ட் உத்தரவு பிறப்பித்தால் அது அன்புமணி தரப்பிற்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும். சுயேட்சையாக ஒரு சின்னத்தை தேர்வு செய்து, அதை வாக்காளர்களிடம் கொண்டு சென்று, அன்புமணி கணிசமான ஓட்டுக்களை பெற்று, வெற்றி பெறுவது மிகப் பெரிய போராட்டமாக இருக்கும்.