NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பொதுக்கூட்ட மேடையில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத 'மாம்பழம்' சின்னத்தைப் பயன்படுத்தியதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோதமான செயல் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று மதராந்தகத்தில் நடைபெற்ற உள்ளது. இந்த மேடையின் பின்னணியில் என்டிஏ கூட்டணி கட்சிகள் மற்றும் அவற்றின் சின்னங்கள் உள்ள பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதே போல் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் சின்னமான 'மாம்பழம்' சின்னமும் பேனரில் இடம்பெற்றுள்ளது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவர் ராமதாஸ், மேடையில் மாம்பழம் சின்னம் பயன்படுத்தப்பட்டதை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
பிரதமர் பங்கேற்கும் ஒரு அரசு மற்றும் அரசியல் சார்ந்த கூட்டத்தில், உரிய அனுமதியின்றி ஒரு கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்துவது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும். தேர்தல் ஆணையத்தால் முறையாக அங்கீகரிக்கப்படாத அல்லது ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஒதுக்கப்படாத சின்னத்தைப் பொதுக்கூட்ட மேடைகளில் காட்சிப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். அனுமதியின்றிச் சின்னத்தைப் பயன்படுத்துவது தேர்தல் நடைமுறைகளை மீறும் செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸின் இந்தத் திடீர் கண்டனம் அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகக் கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் சின்னங்கள் மேடையில் இடம்பெறுவது வழக்கம் என்றாலும், "அங்கீகரிக்கப்படாத சின்னம்" என்று ராமதாஸே குறிப்பிட்டிருப்பது, ராமதாஸ் எந்த அளவிற்கு கோபத்தில் இருக்கிறார் என்பதை காட்டுகிறது. ராமதாசின் இந்த குற்றச்சாட்டிற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மற்ற தலைவர்களோ அல்லது பாஜக தரப்போ இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை.
சமீபத்தில் அன்புமணி தரப்பு பாமக, அதிமுக கூட்டணியில் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போதும் கட்சியின் நிறுவனர் தான் இருக்கையில் அன்புமணியுடன் அதிமுக கூட்டணி பேசி, ஒப்பந்தம் போட்டுள்ளது செல்லாது என ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். அன்புமணி, என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளால் அவர்களின் பாமக சின்னம் மாம்பழம் என்பதன் அடிப்படையில் பேனரில் பாமக சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை சட்டச விரோதம் என ராமதாஸ் பேசி உள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.