யாருடன் கூட்டணி?...நாளை முடிவெடுக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்

Su.tha Arivalagan
Jan 09, 2026,12:09 PM IST

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


2 நாட்களுக்கு முன்பு அன்புமணி தலைமையிலான பாமக, அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு டாக்டர் ராமதாஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், இது சட்ட விரோதமானது என்றும் தெரிவித்திருந்தார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது அன்புமணியை மிக கடுமையாக விமர்சித்த ராமதாஸ், இன்று அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார். வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாமக செயல் தலைவர் காந்திமதி போட்டியிடுவார் என்று மருத்துவர் ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதோடு தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு அளிக்கும் நிகழ்வை மருத்துவர் ராமதாஸ் இன்று தொடங்கி வைத்தார்.




இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி, தமிழக சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் நாளை ஆலோசித்து முடிவு செய்ய உள்ளார். ராமதாஸ்-அன்புமணி இணைந்தால் அது பாமக.,விற்கு மிகப் பெரிய பலம். ஆனால் அதற்கு காலம் கடந்து விட்டது. வரும் சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவதாக முடிவு செய்யவில்லை. மருத்துவர் ராமதாஸின் முடிவுதான் கட்சியில் இருப்பவர்களின் முடிவு. அவர் சொல்வதை கேட்டுத்தான் நாங்கள் போட்டியிடுவது குறித்து முடிவு செய்வோம்.


நான் எந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கும் விருப்ப மனு கொடுக்கப் போவதில்லை. 46 வருடங்களாக அவருடன் இருக்கிறோம். அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் என் முடிவு. அன்புமணி, ஐயாவை சந்தித்து, உங்கள் தலைமையில் கூட்டணி பேசலாம் என சொல்லி இருந்தால் மகிழ்ச்சி. ஆனால் அப்படி செய்யவில்லை. அவராக போய் கூட்டணி பேசி முடித்து விட்டார். கூட்டணி குறித்து நாளை ராமதாஸ் ஆலோசித்து, முடிவு எடுப்பார் என்றார். தவெக.,வும் பாமக உடன் கூட்டணி பேசி வருவதாக சொல்லப்படுகிறது.