அன்புமணிக்கு கெடு முடிந்தது.. என்ன முடிவெடுக்க போகிறார் டாக்டர் ராமதாஸ்?.. இன்று முக்கிய ஆலோசனை
சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கு, அக்கட்சியின் தலைமை அளித்திருந்த கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ளதால், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று என்ன முடிவை வெளியிட போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ஒட்டுமொத்த தமிழக அரசியல் களமும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறது.
பாமக.,வில் தந்தை - மகன் இடையேயான போட்டி மோதல்கள் கடந்த பல மாதங்களாக இருந்து வருகிறது. கட்சியில் தனக்கே அதிக அதிகாரம், செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாறி மாறி போட்டி போட்டு வருகிறார்கள். அன்புமணி மீது, ராமதாஸ் சரமாரியாக பல குற்றச்சாட்டுக்களை வெளியிட்டார். ஆனால் அதற்கு அன்புமணி தரப்பில் மறுப்போ, விளக்கமோ அளிக்கப்படவில்லை. இந்த விவகாரம் கோர்ட் வரை சென்றும் சமரச முடிவு எட்டப்படவில்லை. பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்த பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக, அன்புமணியும் 10 நாட்களுக்கு முன்னதாகவே பொதுக்குழு நடத்தி முடித்தார்.
கடந்த மாதம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அன்புமணி மீது ராமதாஸ் கூறிய ஒட்டுக்கேட்பு விவகாரம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க 8 பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதோடு கட்சியில் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் தனக்கு மட்டுமே உண்டு என கட்சியின் சட்ட விதிகளில் மாற்றமும் கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்து தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கம் அளிக்க அன்புமணிக்கு ஆகஸ்ட் 31ம் தேதி வரை கெடு விதிக்கப்படுவதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி அன்புமணிக்கு விதிக்கப்பட்ட கெடு நேற்றுடன் நிறைவடைந்து விட்டது. இருந்தாலும் இதுவரை அன்புமணி தரப்பில் எந்த விளக்கமும், மறுப்பும் கட்சி தலைமைக்கு அளிக்கப்பட்டதாக தெரியவில்லை. அன்புமணிக்கு அளிக்கப்பட்ட கெடு முடிந்து விட்டதால் இன்று, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து சில முக்கிய முடிவுகள் எடுத்து அறிக்கையாகவோ அல்லது பேட்டி அளித்தோ வெளியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அன்புமணி மீது ராமதாஸ் மிக கடுமையான அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கூட நீக்கப்படும் அறிவிப்பை வெளியிடுவதற்கும் அதிக வாய்ப்புள்ளதாக கட்சியின் வட்டார தகவல்கள் கூறுகின்றன.
அது மட்டுமல்ல ஏற்கனவே பொதுக்குழுவில் மகள் காந்திமதியை மேடை ஏற்றிய ராமதாஸ், காந்திமதிக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பொறுப்பு அல்லது பதவியை கொடுக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அன்புமணி விவகாரம் ஒரு முடிவுக்கு வராமல் இருப்பதால் தான் கூட்டணி குறித்தும் ராமதாஸ் இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதாகவும், இன்று அன்புமணி விஷயத்தில் முக்கிய முடிவை எடுத்த பிறகு விரைவில் கூட்டணி குறித்த முடிவையும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.