எழுத்தறிவித்த இறைவர்களுக்கு நன்றி பகரும் நன்னாள் இந்நாள்!

Su.tha Arivalagan
Sep 05, 2026,02:59 PM IST

- முனைவர் தி. தங்கலட்சுமி


மொழிபயில் 

ஆரம்ப நாட்களில் 

இளங்கரம் பற்றி 

இதமாக அகரமிட்ட ஆசிரியர்களால்

சிகரங்கள் பல தொட்டோம்! 


எழுத்தில் தவழத் தொடங்கி

எழுத்தால் எழுந்து நிற்கச் செய்தே 

எழுத்தோடே ஒன்றி ஆற்றொழுக்கான

அறிவோட்டத்தை முடுக்கிவிட்டு 

முனைவர் எனும் 

உச்சிச் சிகர முனைவரை... 

உயரச் செய்யும் 

ஏற்றமிகு ஏணியாய் விளங்கிடும்

எழுத்தறி நாதர்களே!




சொல்லும் பதமும்

சொல்லித் தந்தே

சொல்லில்

சுகமுண்டென

சுவைக்கச் செய்து

சொல் விருந்து

பல படைத்து

செவிக்கு உணவிட்டு

செவிச்செல்வத்தை

தானாமாய் ஈந்த 

செல்வப் பெருந்தகைகளே!


சிகரம் எட்டும் 

சிந்தனைகளை

சிந்தையில் விதைத்த 

வித்தக சித்தர்களே!


அகரமிட்டு

அகத்திற்கு

ஆகாரமிட்ட

ஆசான்களே!


புத்திக்கு 

உரமிட்டு 

வாழ்விற்கு 

ஆதாரமிட்ட

ஆசிரியர்களே! 


நூல் கொண்டு 

அழகான அனுபவப் பின்னலை 

உருவாக்கும்

கல்வி வினைஞர்களே! 


கற்பூர புத்தியோ

மந்தபுத்தியோ

எந்த புத்தியாயினும்

அதில் சக்தியூட்டி

ஒளிரச் செய்யும் 

ஒளியூட்டிகளே!


அறம் பல போதித்து

அறிவை அறியச் செய்து

அறியாமையை அறவே நீக்கும் 

அறிவின் அறக்கட்டளைகளே! 


வித்தைகள் பல கற்றுத்தந்த 

வித்தகர்களே!


புத்தகங்கள் கொண்டு 

புத்தியைத் தீட்டி

புதுமைகள் படைக்க 

புத்திக்கூர்மையை 

ஏற்படுத்தும்

அறிவின் ஆசான்களாகிய

சாதனை புரிய வைத்திடும் 

சாணைக்கல்லிற்கு 

சாஷ்டாங்க நமஸ்காரம்! 


நுண்ணறிவில் நுணுக்கங்களை

நுட்பமாய் செறிவூட்டும்

இயற்கை விஞ்ஞானிகளே!


பேதமற்றுப் பெருங்கருணை 

காட்டும் பேராசான்களே!


தனதறிவெனும் ஊற்றுநீரை 

இறைத்து வழங்கும் வள்ளல்களே!


அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் 

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!


(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).