Poems.. மனதில் என்றும் அழியாமல் தைக்கும் கலையே.. கவிதை!

Su.tha Arivalagan
Apr 20, 2026,06:22 PM IST

கவி + கதை + விதை + தை = கவிதை.


கவி என்ற பாடல் பொருள் அல்லது செய்யுள் பொருளை கதை வடிவமாகவோ அல்லது விதைகளாக தூவியோ பிறர் மனதில் என்றும் அழியாமல் தைக்கும் கலையே கவிதை எனலாம்.


"கண்ணுக்கு மை அழகு,

கவிதைக்கு பொய் அழகு"


என்பது பழைய மொழி. ஆனால் இன்று பலர் சிறு நிகழ்வுகளையும் தம் வார்த்தை ஜாலங்களால் மற்றவர்களை திகைப்பில் ஆழ்த்தும் ஆற்றலை பெற்றிருக்கின்றனர்.


கவிதைகள் நமக்கு ஆலோசனை தருகின்றன


சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று

சிறுசா இருக்கையில் திருத்திக்கோ - தவறு

சிறுசா இருக்கையில் திருத்திக்கோ....

தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா - அது

திரும்பவும் வராம பார்த்துக்கோ....


இவ்விரிகள் சொல்லும் கருத்துக்கள் வீழ்ந்து போய் உட்கார்ந்திருக்கும் ஒருவனை தட்டி எழுப்பி ஆலோசனையும் வழியையும் காண்பிக்கிறது அல்லவா! அந்த ஒரு நிமிட வழிகாட்டுதல் ஒருவனின் வாழ்க்கையையே மாற்றக்கூடும்! யாருக்கு தெரியும்!


கவிதைகள் நமக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது




பெரும் கடலை அசைத்துக் கொண்டிருக்கிறது மீன் குஞ்சின் - சின்ன துடுப்பு!

விழுந்த பின்னும் பறந்து பார்க்கிறது பறவையின் இறகு!

உடைந்த பானை - மிச்சம் இருக்கிறது கொஞ்சம் தண்ணீர்!

வலிக்கிறது - மகிழ்ச்சி கொள், நீ உயிரோடு இருக்கிறாய்!


நம்பிக்கையற்ற நிலையில் இருப்பவர்களுக்கு இந்த வார்த்தைகள் பெரும் மருந்தாகவும் தம் தன்னம்பிக்கையை புதுப்பிக்கும் கருவியாகவும் மனதில் பேசுவது உண்மை தானே!


கவிதைகள் நம் எண்ணங்களின் வெளிப்பாடு


மயிலிறகு குட்டி போட்டது பள்ளியின் நினைவுகள்! (மகிழ்ச்சி)

வாடியது கொக்கு..... ஓடியது எல்லாம் ஜோடி மீன்கள்! (இரக்கம்)

குழந்தையை காணவில்லை - என அழுத பெண்ணின் - கையில் தொலையாமல் இருந்தது அவள் கைபேசி! (கோபம்)

என்னை போலவே, நடித்து காட்டுகிறது என் நிழல்! (வியப்பு)

பனி நிறைந்த கண்ணாடியில் கண் வரைந்தேன் வழிந்தது கண்ணீர்! (சோகம்)

எந்த கிளி ஏமாற்றியதோ - தாடியுடன் நிற்கிறது ஆலமரம்! (ஏமாற்றம்)

பலூன் விற்கும் சிறுமிக்கும் - அதை வாங்கும் வயது தான்! (பரிதாபம்)

நீ காலின் மேல் கால் போட்டு அமர்ந்த தண்ணீர் மேல்... என் மனது பதிந்ததால் - நான் ஓட்ட போட்ட ஓடம் போல் ஆடுகிறேன் சாய்ந்து! நாம விடுவிதி எந்த காலம்! (காதல்)

இலையின் நடனம் அதே காற்று இலையின் மரணம்! (புரிதல்)

அதிக விழுக்காடு வழக்குகள் வாய் தகராறில் வந்தவை தான்! (முதிர்ச்சி)


எண்ணங்களின் வெளிப்பாடாக வரும் வார்த்தைகளின் அழகு கவிதைகள் ஆகின்றன. நாம் எந்த மனநிலையில் உள்ளோம் என்பதை வெளிப்படுத்துவதோடு எழுதியவர்களின் அகத்தை கண்ணாடி போல் காண்பிக்கின்றன கவிதைகள். வாசிப்பவர்களின் அகத்தையும் எண்ணங்களையும் சற்றே மெருகேற்றுகிறது என்பதில் சந்தேகமே இல்லை!


கவிதைகள் நம்மை படைப்பாளியாக்குகிறது


உலைகுடியில் இசைக்கிறாள் அம்மா நடனமாகிறது நெருப்பு!

வாயை கிழித்த பிறகும் - தொடர்ந்து பேசுகிறது கடிதம்!

அந்த பயணத்திற்கு உயிர் தந்தது ஒரு பிணம்!

வாடகை வீட்டில் - தனக்கென ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறது சிலந்திகள்!

காற்றுக்கு சலிப்பதேயில்லை - ஒரே புத்தகத்தை ஓராயிரம் முறை புரட்டுகிறது!

மணல் விற்கும் திருடனுக்கு தேவைப்படுகிறது - அவன் அஸ்தியை கரைக்க ஒரு ஆறு!

புகைப்படக்காரரை அசையாமல் நிற்க வைத்தது - அந்த மலையருவி!


ஹைக்கூ கவிதை நடை ஜப்பானில் தோன்றியிருந்தாலும் நம் இந்தியர்கள் பயன்படுத்தும் விதம் வியப்புக்குரியது. எதுகை, மோனை, சந்த நயம் இல்லாவிட்டாலும், பெரிய ஆழ்ந்த கருத்தினையும் இரு வரிகளில் அடக்கி ஆணி அடித்தது போல சொல்ல வைத்து, பல படைப்பாளிகளை உருவாக்குகின்றன கவிதைகள்.


வார்த்தைகளுக்கு என்றுமே உயிர் உண்டு. அவை நம்மோடு பேசும், சிரிக்க வைக்கும், வியக்க வைக்கும், நம் எண்ணங்களை தெளிவுபடுத்தும். அத்தகைய வார்த்தை கோர்வைகளாக உள்ள கவிதைகள் நம் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வழியில் அவ்வப்போது நம்மை தொட்டு விட்டு தான் செல்கின்றன.


அத்தொடுதலை நாம் பயனுள்ளதாக மாற்றுவோம்! படைப்பாளிகளாவோம்! வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்!


குறிப்பு: இதில் நான் மேற்கோள் காட்டியுள்ள கவிதைகள் என்னுடையது அல்ல. நான் வாசித்தவை. சம்பந்தப்பட்ட கவிஞர்களுக்கு நன்றி.


(ஆர். உமா, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பாணவேடுதோட்டம்)