திருச்சி சுற்றுப் பயணம்.. தவெக தலைவர் விஜய்க்கு போலீஸ் விதித்த 23 நிபந்தனைகள்!

Su.tha Arivalagan
Sep 10, 2025,02:38 PM IST

திருச்சி: தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 13ம் தேதி திருச்சியில் இருந்து தனது பிரச்சார சுற்றுப் பயணத்தை துவக்க உள்ளார். இந்த பிரச்சாரத்திற்கு விஜய்க்கு போலீசார் தரப்பில் 23 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.


தவெக தலைவர் விஜய், விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் இரண்டு மாநில மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்து, தமிழக அரசியல் களத்தில் முக்கிய இடத்தை பிடித்து விட்டார். விஜய் நடத்திய இரண்டு மாநாடுகளுமே தமிழக மக்களிடம் மட்டுமின்றி, அனைத்து அரசியல் கட்சிகளையும் திரும்பி பார்க்க வைத்து, விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகளை கவனிக்க வைத்துள்ளது. 


தமிழக மக்களும், அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என பேச வைத்துள்ளது. மாநாட்டை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்களை நேரடியாக சந்தித்து, பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார் விஜய். செப்டம்பர் 13ம் தேதி திருச்சியில் தனது பிரச்சார சுற்றுப் பயணத்தை துவக்கி, டிசம்பர் 20ம் தேதி மதுரையில் பிரச்சார பயணத்தை நிறைவு செய்யவும் விஜய் திட்டமிட்டுள்ளார். 




விஜய் சுற்றுப்பயணத்துக்கான விரிவான முழு அட்டவணையும் வெளியிடப்பட்டு விட்டது. முதலில் மக்களுக்கு இடையூறாக இருக்கும் என கூறி விஜய்யின் பிரச்சாரத்திற்கு அனுமதி தர மறுத்த திருச்சி போலீசார் நேற்று, மரக்கடை மார்கெட் பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கினர். 


இந்நிலையில் இன்று, விஜய் திருச்சியில் பிரச்சாரம் செய்வதற்கு மொத்தமாக 23 நிபந்தனைகள் போலீசார் தரப்பில் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, சாலையில் விஜய் ரோட்ஷோ நடத்தக் கூடாது. மரக்கடை பகுதியில் 30 நிமிடங்களுக்கு மேல் விஜய் பிரச்சாரம் செய்து பேசக் கூடாது. கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், மாற்றுதிறனாளிகள் ஆகியோரை பிரச்சார கூட்டத்திற்கு அழைத்து வரக் கூடாது என்பது உள்ளிட்ட 23 நிபந்தனைகள் விஜய்க்கு விதிக்கப்பட்டுள்ளது.