காவல்துறையினர் மரியாதை, புன்னகை, அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Meenakshi
Jan 03, 2026,09:04 PM IST

சென்னை: காவலர்கள் மக்கள் காட்சிக்கு எளியவர்களாக, கனிவாக நடந்து கொள்வனர்களாக இருக்க வேண்டும். புகார் அளிக்க வருபவர்களிடம் மரியாதை, புன்னகை, அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னையில், சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்ரு வழங்கினார். அதன்பின்னர் அவர் பேசுகையில், தமிழ்நாட்டின் எதிர் காலமே காவலர்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது. உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற அதிகாரத்தை மக்களுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும். காவல்துறையினர் நல்லது செய்யும் செய்தி மீடியாக்களில் வருகின்ற போது ஒட்டு மொத்த காவல்துறையினருக்கும் பெருமை வந்து சேர்கிறது. காவலர் பணி மனித நேயத்துடன் தொடர்புடையது. எங்கோ ஒரு காவலர் தவறு செய்வது ஒட்டுமொத்த காவலர்களையும் அது பாதிக்கிறது. அதை உணர்ந்து ஒவ்வொருத்தரும் செயல்பட வேண்டும்.




காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்று சொல்வது வெறும் வாசகமாக இல்லாமல், ரியாலிட்டியில் அதனை நிரூபிக்க வேண்டும். காவலர்கள்  காட்சிக்கு எளியவர்களாக, கனிவாக நடந்து கொள்நவர்களாக இருக்க வேண்டும். புகார் அளிக்க வருபவர்களிடம் மரியாதை, புன்னகை, அக்கறை இவை எல்லாம் இருக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.


ஒரு முதலமைச்சராக இது என்னுடைய கோரிக்கை மட்டும் அல்ல. 100 சதவீதம் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய எனது உத்தரவு. அதே போல போதைப்பொருட்கள் நடமாட்டம் மற்றும் விற்பனையை தடுப்பதில் ஜிரோ டாலரன்ஸ் என்ற பாலிசியை நீங்கள் பயன்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை கவனத்துடன் கையாள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.