பொள்ளாச்சி தீர்ப்பு.. டிவிட்டரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு மோதல்!
May 13, 2025,04:58 PM IST
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பை வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி இடையே எக்ஸ் தளத்தில் கடும் மோதல் மூண்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாட்டை மட்டுமல்லாமல் இந்தியாவையே உலுக்கிய கொடும் சம்பவம்தான் பொள்ளாச்சி பாலியல் கூட்டு பலாத்கார கொடூரம். அப்பாவி பெண்களை ஆசை வார்த்தை கூறி மடக்கி மயக்கி கொடூரமாக கும்பலாக பலாத்காரம் செய்து அட்டூழியத்தை அரங்கேற்றிய அயோக்கியர்கள் அடுத்தடுத்துக் கைது செய்யப்பட்டனர்.
9 மனித மிருகங்கள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டன. இவர்கள் செய்த குரூரத்தின் கொடுமைகள் கேட்டோர் இதயங்களில் ரத்தம் வர வைத்தது. இந்த 9 பேர் மீதான வழக்கு முதலில் சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிஐ வசம் போனது. சிபிஐ விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வெளியானது. 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ள கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனையை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.
இந்த தீர்ப்பை தமிழ்நாடு முழுவதும் மக்கள் வரவேற்றுள்ளனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். பல்துறை அமைப்புகள், மகளிர் அமைப்புகள் வரவேற்றுக் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் தீர்ப்பை வரவேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு போட்டிருந்தார். அதற்கு முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார். இதனால் டிவிட்டர் தளம் போர்க்களமாகியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டிருந்த எக்ஸ் பதிவில், பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது! அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும் என்று கூறியிருந்தார் முதல்வர்.
இதற்கு எடப்பாடி பழனிச்சாமி போட்டுள்ள பதிலடி டிவீட்டில் கூறியிருப்பதாவது:
அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு. உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது.
வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் மு.க.ஸ்டாலின்.
யார் வெட்கித் தலை குனிய வேண்டும்?
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட உங்கள் அமைச்சர் மீதும், சென்னை துணை மேயர் மீதும் விசாரணை நடத்த துப்பில்லாத நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லாமல், அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், CBI விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று, மூத்த வக்கீல்களை நியமிக்க , மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்து, 10 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் பெற்றோருக்கும் கிடைக்க வேண்டிய நீதிக்கு எதிராக வாதாடிய நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
நீட் ரகசியம் என்று நீங்களும், உங்கள் மகனும் மாணவர்களை ஏமாற்றிய போதே, உங்களுக்கு வெட்கம், மானமெல்லாம் இல்லை என்பது தெரிந்துவிட்டது.