2026 பொங்கல் எப்போது? ஜனவரி 14-ஆ அல்லது 15-ஆ? - ஒரு தெளிவான விளக்கம்
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், 2026-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி தான் பொங்கல் என்று பஞ்சாங்கங்கள் குறிப்பிடுவதால் பொதுமக்களிடையே ஒரு சிறிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
குழப்பம் ஏன்?
பொதுவாக சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் நுழையும் நேரமே தை மாதப் பிறப்பு அல்லது மகர சங்கராந்தி எனப்படுகிறது. 2026-ம் ஆண்டில், ஜனவரி 14-ம் தேதி மாலை நேரத்திலேயே சூரியன் மகர ராசிக்குள் நுழைந்து விடுகிறார். இதனால் அன்றைய தினமே சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இருப்பினும், தமிழ் கலாச்சாரத்தின்படி ஒரு நாளின் கணக்கீடு என்பது சூரிய உதயத்தில் இருந்தே தொடங்குகிறது.
ஜனவரி 15 ஏன் பொங்கல்?
ஜனவரி 14 அன்று மாலை தை மாதம் பிறந்தாலும், சூரிய உதயத்தின் போது மார்கழி மாதமே நீடிக்கிறது.ஜனவரி 15-ம் தேதி காலையில் சூரியன் உதிக்கும் போது தை மாதம் பிறந்திருப்பதால், அன்றைய தினமே தை முதல் நாளாகவும், பொங்கல் பண்டிகையாகவும் கணக்கிடப்படுகிறது. அதிகாலையில் சூரிய உதயத்தின் போது பொங்கலிட்டு வழிபடுவதே முறை என்பதால், ஜனவரி 15-ம் தேதியே சிறந்தது.
2025ம் ஆண்டு மாதம் டிசம்பர் 16ம் தேதியன்று காலை 11.57 மணிக்கே பிறந்துள்ளது. இதனால் 2026ம் ஆண்டில் தை மாத பிறப்பும் தாமதமாகி உள்ளது. இதன் காரணமாக தான் 2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியன்று போகி பண்டிகையும், ஜனவரி 15ம் தேதியன்று தைப் பொங்கலும், ஜனவரி 16ம் தேதியன்று மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது.