ஈரம்.. ஒரு நிமிடக் கதை (52)
- "ஒரு நிமிடக் கதை அரசி" பூரணவள்ளி சேகர்
நல்ல முகூர்த்த நாளில் கங்காவின் திருமணம் இனிதே நடந்தது. அன்று மாலை தன் தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். கிளம்பும் நேரத்தில் மழை தூறிக் கொண்டிருந்தது.
கங்காவின் அம்மா ராதாவிற்குத் தன் கணவன் தற்போது வீட்டில் இல்லையே என்றும் உடனிருக்க கங்கா அனுமதிக்கவில்லையே என்ற தவிப்பில் இருந்தாள்.
தன் ஆடம்பரத்தால் சில ஆண்டுகளுக்கு முன்பு ராதாவையும் கங்காவையும் தவிக்க விட்டுச் சென்றது சசிதரன் தான்.
இரண்டு ஆண்டுகள் கோயில் குளங்களில் கழித்து விட்டு. உடல் நலக் குறைவு ஏற்பட்டது காரணமாகத் தன் மனைவி ராதாவைத் தேடி வந்தான் சசிதரன்.
தன் கணவனைக் கண்டதும் பேரானந்தம் கொண்ட ராதாவிற்கு கங்கா வின் உத்தரவு அதிர்ச்சி அளித்தது. சசிதரன் இங்கு வரக்கூடாது. வீட்டிற்குள் அப்பா என்பவரை அனுமதிக்கக்கூடாது என்று கங்கா உறுதியாகக் கூறினாள்.
மகளின் சொல்லைத் தட்ட முடியாமல் மகளுக்குத் தெரியாமல் வரச்சொல்லி கணவனுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தாள் ராதா.
கங்காவிற்குத் திருமணம் பேசும் போது கூட சசிதரன் வரக்கூடாது என்று கங்கா சொன்னாள். சசிதரன் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டாலும் கங்கா மனம் மாறவில்லை.
சசிதரன் தனியாக விட்டுச் சென்ற போது ராதாவும் கங்காவும் பட்ட துன்பங்கள் நீங்காமல் கங்காவின் மனதில் பதிந்திருந்தது.
சசிதரனும் வேண்டுமென்றே அவர்களைப் பிரியவில்லை. ஏதோ கனவில் நடந்தது போல் எல்லாம் நடந்துவிட்டது. மாப்பிள்ளை வீட்டாரும் சசிதரன் பற்றி அறிந்து பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
திருமணம் முடித்து மழைத் தூறலுடன் ராதாவிடம் சொல்லி விட்டுக் கிளம்பிய கங்கா யாரோ தன்னைப் பார்ப்பது போல் உணர்ந்தாள். மெதுவாக சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் தென்படவில்லை.
சசிதரன் ஒரு மரத்தின் பின்னால் நின்று தன் மகளைப் பார்த்து ஆசீர்வாதம் செய்தான். சசிதரன் கங்கா ராதா ஆகிய மூவரின் விழிகளில் இருந்தும் ஈரம் கசிந்து கொண்டிருந்தது. மழைத் தூறலினால் அவர்களின் உடல் நனையவில்லை.
மனத்தூறலினால் விழிகள் நனைந்து ஈரம் பெருகியது.
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)