ஜன்னல் .. ஒரு நிமிடக் கதை (64)

Su.tha Arivalagan
Nov 24, 2026,12:52 PM IST

- "ஒரு நிமிடக் கதை அரசி" பூரணவள்ளி சேகர்


அலுவலக வேலை நிமித்தமாக ஒரு நாள் வெளியூர் பயணம் செய்ய ஆயத்தம் ஆனான் அகிலேஷ். தேவையான துணிகள் டவல் மற்றும் பற்பசை போன்ற அத்தியாவசியப் பொருட்களை எடுத்து சூட்கேசில் அடுக்கினான்.


தன் அலைபேசியை முழுமையாக சார்ஜ் ஏற்றிக் கொண்டு சார்ஜரை மறக்காமல் எடுத்துக் கொண்டான். பேருந்தில் ஏறியவுடன்  ஜன்னல் ஓரமாக உள்ள இருக்கையைத் தேடி அமர்ந்தான்.


அவன் அருகில் வந்து உட்கார்ந்த ஒரு சிறுவன் ஜன்னலோர சீட் கேட்டு அருகில் இருந்த தன் தந்தையிடம் அடம் பிடித்தான்.  வெளியில் உள்ள இயற்கைக் காட்சிகளைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று சொன்னான்.




அகிலேஷ் எதையும் காதில் வாங்காமல் இருந்தான். ஜன்னல் ஓர இருக்கையை சிறுவனுக்கு விட்டுக் கொடுக்க மனமில்லை. ஜன்னல் ஓர இருக்கை எல்லா வயதினருக்கும் பிடிக்கும். அகிலேஷுக்கும் மிகவும் பிடித்தமானதாக இருந்தது.


மாலை நேரமாக இருந்ததால் வெளியில் இருந்து ஜில்லென்று காற்று வீசியது. அவன் நண்பன் அலைபேசியில் அகிலேஷின் வருகை குறித்துக் கேட்டறிந்தார்.


அகிலேஷ் இயற்கைக் காட்சிகளை ரசித்தான். மாலை நேரமாக இருந்ததால் அங்கே பயிரிடப்பட்டு  இருந்த சூரியகாந்தி மலர்கள் தலையைக் கவிழ்ந்து இருந்ததும் மிகவும் அழகாக இருந்தது.


வேகமாக நகரும் மேகங்கள்.  மஞ்சள் நிற சூரியக்கதிர்கள். கூடு திரும்பும் பறவைகள் கூட்டம். மலையைக் குடைந்து செல்லும் இரயில் ஆகாயத்தில் விர்ரென்று பறந்த ஆகாய விமானம் ஆகிய எல்லாவற்றையும் ரசித்தான்.


மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால்  பேருந்து நன்றாகக் குலுங்கியது. சுய நினைவுக்கு வந்த அகிலேஷ் வெளியில் கும்மிருட்டாக இருப்பதை உணர்ந்தான். அலைபேசியில் அகிலேஷ் ரசித்துக் கொண்டிருந்த இயற்கைக் காட்சிகளின் படம் இன்னும் ஓடிக் கொண்டிருந்தது.


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)