காமாட்சியும் அனிதாவும்.. ஒரு நிமிடக் கதை (65)

Su.tha Arivalagan
Nov 25, 2026,11:15 AM IST

- "ஒரு நிமிடக் கதை அரசி" பூரணவள்ளி சேகர்


நாளைக்கு என்ன சமைக்கலாம் என்ற கேள்விக்கு ஒரு வழியாக வத்தல் குழம்பும்  சௌசௌ பாசிப்பருப்பு  கூட்டும் அப்பளமும் செய்துவிடலாம் என்று முடிவெடுத்த பின்னர் அமைதியாகத் தூங்கச் சென்றாள் காமாட்சி.


காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு வீட்டையும் பெருக்கி சுத்தம் செய்வதுடன் காலை உணவு மற்றும் மதிய உணவும் தயார் செய்ய வேண்டும். வீட்டில் காமாட்சியும் அனிதாவும் மட்டுமே இருக்கிறார்கள்.


அனிதா ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்கிறாள். அனிதாவின் மதிய உணவின் சுவை அபாரமாக இருக்கும்.

காமாட்சி அப்படி பார்த்துப் பார்த்து சமைத்துத் தருவாள். அனிதாவிற்கு மதிய உணவு கொண்டு செல்லவும் பிடிக்காது. காமாட்சி  செய்து கொடுக்கும் சாப்பாடும் பிடிக்காது.


அனிதாவின் அலுவலகத்தில் அனிதாவின் டிபன் பாக்ஸ் அனைவராலும் பகிர்ந்து உண்ணப்படும். அனிதா தன் உணவை மற்றவர்களுக்குக் கொடுத்து விட்டு பீட்சா பர்கர் என்று ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவாள்.




காமாட்சிக்கு எல்லாம் தூய்மையாக இருக்க வேண்டும். ஆனால் அனிதா எதைப் பற்றியும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் அலங்கோலமாக வைத்திருப்பாள். அவற்றை எல்லாம் சீர் படுத்துவதற்கே நிறைய நேரம் ஆகும். ஆனாலும் பொறுமையாக அனைத்தையும் செய்வாள் காமாட்சி.


அனிதாவிற்கு மல்லிகைப்பூ பிடிக்கும் என்பதால் மல்லிகைப்பூவை எங்கே பார்த்தாலும் வாங்கி வைத்து விடுவாள் காமாட்சி. மல்லிகைப்பூ பிடிக்கும் என்றாலும்  காமாட்சி வாங்கி வைத்து தலையில் வைக்கச் சொல்லும் போது  அனிதாவிற்கு பூவின் மேலும் எரிச்சலாக இருக்கும்.


அனிதாவின் சம்பளத்தைக் கூட காமாட்சி கேட்டதும் இல்லை.  தன் பென்சன் பணத்திலேயே வீட்டை நிர்வகித்தாள். காமாட்சி தன் பணத்தைக் கொடுத்ததுடன் உடல் உழைப்பையும் முழுமையாகக் கொடுத்தாள்.


அனிதாவிற்குக் காப்பி முதற்கொண்டு கையில் கொண்டு வந்து கொடுத்தாள். காமாட்சியின் மகனும் அனிதாவின் கணவனுமான சுரேஷ் ராணுவத்தில் பணி புரிகிறான்.


தினமும் பயப்படக்கூடிய காஷ்மீர் பகுதியில் இருப்பதால் எப்போதாவதுதான் வீட்டிற்குத் தொடர்பு கொள்வான்.

சுரேஷின் மாத வருமானம் வீட்டிற்கு வாங்கிய கடன் கட்ட உதவியது.  செலவு போக மீதமுள்ள பணம்  சேமிப்பாக மாறியது.


அனிதா தன் கணவனைப் பிரிந்து இருப்பதும் கணவன் பதட்டம் நிறைந்த சூழலில் பணி புரிகிறார் என்பதும்  பெரிய கவலையாக இருந்தது.


அதே கவலையுடன் காமாட்சி இருந்தாலும் தன் மருமகளின் முகம் கோணாமல் அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்தாள்.


எவ்வளவுதான் மருமகள் அனிதாவிற்கு உதவிகள் செய்தாலும் காமாட்சி மாமியார் என்பதால் அனிதாவிற்கு காமாட்சியின் உழைப்பும் அருமையும் தெரியாமல் போனது.


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)