மறுகதவு.. ஒரு நிமிடக் கதை (32)
- பூரணவள்ளி சேகர்
அப்துல் மற்றும் ஆயிஷா இருவரும் கடும் உழைப்பாளிகள். வீட்டில் இருபது முட்டைக்கோழிகள் மற்றும் பத்து சேவல்களை வளர்த்து வந்தனர். வீட்டைச் சுற்றி பூச்செடிகள் மற்றும் காய்கறிச் செடிகளையும் வளர்த்தனர்.
கோழிகள் முட்டையிடும் போது மட்டும் அவற்றிற்காகக் கட்டப்பட்ட கூட்டில் வந்து இடும். இரவு நேரங்களில் மரங்கள் மற்றும் கூட்டின் மேல் பகுதிகளில் கூட தங்கின.
கோழிகளை அடை வைப்பதை விட வேறு பராமரிப்பு அவற்றிற்காகச் அவர்கள் செய்தது இல்லை. மாலை நேரத்தில் முட்டைகளை எடுத்து தேவையானவற்றை வைத்துக்கொண்டு மீதியை விற்று விடுவார்கள்.
செடிகளுக்கு அவர்கள் பயன்படுத்திய நீர் வாய்க்கால் வழியாக செல்லும்படி செய்திருந்தனர். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் ஊற்றவும் செய்வார்கள். முட்டை காய்கறி பூக்கள் ஆகியவற்றை விற்பனை செய்வார்கள்.
இதற்கிடையில் அப்துல் கடும் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆயிஷா உடனிருந்து கவனிக்க வேண்டிய சூழலில் கோழிகளையும் செடிகளையும் கவனிக்க இயலாமல் போனது.
கிட்டத்தட்ட இருபது நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பியபோது கோழிக்கூடு முட்டைகளால் நிரம்பி இருந்தது. செடிகள் அனைத்தும் வாடி இருந்தன. என்ன செய்வதென்று யோசித்த அப்துல் கெட்டுப் போன முட்டைகளில் சிலவற்றை உடைத்து செடிகளின் வேர்களில் ஊற்றிவிட்டு தண்ணீர் விட்டான்.
முட்டை ஓடுகளை பூச்செடிகளின் வேர்களில் உரமாக்கினான். ஊட்டச்சத்து பெற்ற செடிகள் நன்கு காய்த்தன. பூச்செடிகளும் பூத்துக் குலுங்கின. ஒரு மாதமாக முடங்கி இருந்த வியாபாரம் அதிகமாக காய்கறிகள் மற்றும் பூக்களால் சமன் செய்யப்பட்டது.
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)