மதி.. ஒரு நிமிடக் கதை (55)
- "ஒரு நிமிடக் கதை அரசி" பூரணவள்ளி சேகர்
ரமேஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். மனைவி இரு குழந்தைகளுடன் காலம் சென்றது.
வருமானம் போதவில்லை என்ற ஆதங்கம் ரமேஷ் மற்றும் அவன் மனைவி ஜெயாவிற்கு இருந்தது.
பணப் பற்றாக்குறை வரும்போது இருவருக்கும் சண்டை பெரியதாக நடக்கும். ஒரு வாரம் பத்து நாள்களுக்கு இருவரும் பேசக்கூட மாட்டார்கள்.
ரமேஷுக்கு அநேக நேரங்களில் அவனது அலைபேசி தான் பிரதானம். மனைவியுடன் சண்டை சச்சரவு எனில் அலைபேசியில் முழுமையாக மூழ்கி விடுவான்.
இப்போதெல்லாம் ரமேஷின் போக்கில் ஒரு வித்தியாசம் இருப்பதாக ஜெயா உணர்ந்தாள். தன் கணவனிடம் இது பற்றிக் கேட்டபோது நமக்கு நல்ல காலம் வந்துவிட்டது என்று ஜெயா விடம் மகிழ்வுடன் கூறினான்.
ரமேஷின் கையில் பணப்புழக்கம் அதிகமாக இருந்தது. ஜெயா கணவனிடம் இந்த மாறுதல் சரியில்லை. எப்படி இவ்வளவு பணம் வந்தது என்று கேட்டு நச்சரித்தாள்.
திடீர் பணவரவு நல்லதல்ல என்று எச்சரித்தாள். ரமேஷின் காதுகள் செயற்கையாக மூடிக் கொண்டன. கையில் பணம் வந்தவுடன் உடன் பிறந்த சகோதரர்கள் போல் தீய பழக்கங்கள் சூழ்ந்தன.
தனியார் கம்பெனி வேலையை விட்டு விட்டான் ரமேஷ். சரசரவென ஏறிய வங்கிக் கணக்கில் இருந்த பணம் இறங்கு முகமானது.
தன் தேவைக்குக் கடன் வாங்க ஆரம்பித்தான். அப்போதுதான் ரமேஷ் அலைபேசியில் ஆன்லைன் கேம் விளையாடி பெற்ற பணத்தை அதிலேயே இழந்து வருவது ஜெயாவிற்குத் தெரியவந்தது.
மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்றும் ஆன்லைன் விளையாட்டை நிறுத்தும்படியும் ஜெயா மன்றாடினாள்.
ரமேஷ் மனைவி சொல்வதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. கடன் தொந்தரவு தாங்க முடியாமல் இருந்த நிலையில் கடைசியாக அவனிடமிருந்த அலைபேசியும் விலைக்குப் போனது.
கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே என்பதை ரமேஷ் உணர்ந்தான்.
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)