மூன்று சக்கர வண்டி.. ஒரு நிமிடக் கதை (62)

Su.tha Arivalagan
Nov 20, 2026,11:57 AM IST

- "ஒரு நிமிடக் கதை அரசி" பூரணவள்ளி சேகர்


சுந்தரம் படிப்பறிவு இல்லாதவர்.   படிக்கும் காலத்தில் படிப்பு  சரியாக ஏறவில்லை. பெற்றோரும் மற்றோரும் படிப்பின் அவசியம் பற்றி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சுந்தரம் எதற்கும் செவி சாய்க்கவில்லை.


காலம் சுழற்சியால் பெரிய ஆள் ஆன போது தான் படிப்பின் அவசியம் சுந்தரத்திற்கு சற்று புரிய ஆரம்பித்தது. ஒரு பருப்புக் கடையில் பொருட்களை ஏற்றி வருவதும் கடைகளுக்குக் கொண்டு சென்று சேர்ப்பதும் சுந்தரத்தின் வேலை.


அவர் தனியாளாக இருந்ததால் பிழைக்க முடிந்தது. வடநாட்டிற்குச் சென்று ஒரு வாரமாவது தங்க வேண்டும். கோயில் குளங்களுக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார் சுந்தரம். தனது  ஆசைப்படி டெல்லிக்கு சென்று தாஜ்மகாலைப் பார்த்து வர ஏற்பாடு செய்தார் சுந்தரம்.




தாஜ்மகால்  பார்க்கச் சென்ற போது அங்கே இருந்த சைக்கிளைக் காட்டி இது யாருடையது என்று ஒரு காவலர் இந்தி மொழியில் கேட்டுக் கொண்டிருந்தார். சுந்தரத்தைப் பார்த்தும் கேட்டார். உடனே சைக்கிளின் சக்கரத்தையும் மூன்று விரல்களையும் காட்டி  காவலர் என்ன கேட்கிறார் என்று புரியாமல் எனக்கு மூன்று சக்கர வண்டி மட்டுமே ஓட்டத் தெரியும் என்றார் சுந்தரம்.


இவரது பாஷை புரியாத காவலர் அருகிலுள்ள ஆட்டோவைக் காட்டி இது உன்னுடையதா? உடனே எடுத்துக் கொண்டு செல் என்று கூறினார். ஒன்றும் புரியாத சுந்தரத்திற்குத் தலை சுற்றியது.


தான் டிரை சைக்கிள் ஓட்டும் தொழிலாளி என்பதை எப்படி விளக்குவேன்  என்று புலம்பியபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார் சுந்தரம்.


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)