நண்பன்.. ஒரு நிமிடக் கதை (61)
- "ஒரு நிமிடக் கதை அரசி" பூரணவள்ளி சேகர்
ஆனந்த் இன்று காலையில் வேகமாகக் கிளம்பினான். ஆனந்த் வேகமாகக் கிளம்புவதை அறிந்த எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.
இவனுடன் சேர்ந்த நாளிலிருந்து எனக்கு ஓய்வே இல்லை. சென்ற வாரம் அருகில் உள்ள மலைக்கு மேலே உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்றான். மலையில் ஏறும் போது எனக்கு மூச்சு வாங்கியது. ஆனந்த் என்னைப் பற்றி சிறிதும் கவலைப் படவில்லை.
என் உடல் ஒத்துழைக்காதது எனக்குத் தானே தெரியும். ஆனந்த் நான் இல்லாமல் எங்கும் செல்ல மாட்டான். என்னைப்போல் எத்தனையோ பேர் இருந்தாலும் எனக்கு மட்டும் தனி மரியாதை.
நான் புதியவன் தான். அதனால் ஆனந்திற்குப் பிடித்தவன். எல்லா வெளி இடங்களுக்கும் அழைத்துச் செல்லும் என்னைத் தன் வீட்டிற்குள் மட்டும் அனுமதிக்க மாட்டான். நான் ஆனந்த் உடன் வந்து ஒரு மாதம் தான் ஆகிறது.
ஆனந்த் என்னைப் பணம் கொடுத்து வாங்குவதற்கு முன் குளிர் சாதன அறையில் ஒய்யாரமாக காட்சிப் பொருளாக இருந்தேன்.
ஆனந்த் என்னை விலை கொடுத்து வாங்கி வந்த நாள் முதல் எனக்குத் தேய்மானம் ஆரம்பித்து விட்டது.
விலை உயர்ந்த காலணி ஆனாலும் காலில் தானே அணிவார்கள். காலில் அணிவதை வீட்டினுள் நுழைய அனுமதி மறுப்பார்கள் அல்லவா? நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)