ஓய்வு.. ஒரு நிமிடக் கதை (50)
Nov 01, 2026,10:52 AM IST
- பூரணவள்ளி சேகர்
வசந்தா கட்டிலில் ஓய்வாகப் படுத்திருக்க பக்கத்தில் அமர்ந்திருந்த வசந்தாவின் கணவன் வாசு தன் மனைவியை உற்று நோக்கினார். எவ்வளவு நிம்மதியாகப் படுத்திருக்கிறாள். வசந்தாவை இதற்கு முன் ஒரு போதும் இவ்வாறு ஓய்வெடுத்துப் பார்த்ததில்லையே என்ற சிந்தனை வாசுவின் மனதில் ஓடியது.
வசந்தாவைத் திருமணம் முடித்து அழைத்து வந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. வசந்தா எப்போதும் இயந்திரம் போல் சுற்றிக் கொண்டே இருப்பாள். திருமணம் முடித்து வந்த பின் அத்தனை வேலைகளையும் அவளே முழு மனதுடன் செய்தாள்.
வாசுவின் தாய் தந்தை மற்றும் சகோதரனை நன்கு கவனித்துக் கொண்டாள். ஒவ்வொருவருக்கும் என்னென்ன பிடிக்கும் என்று நன்கு அறிந்திருந்தாள். அவரவர்க்குப் பிடித்த உணவுகளை இன்முகத்துடன் செய்து பரிமாறினாள்.
வசந்தாவிற்குக் குழந்தைகள் பிறந்த பின் இன்னும் வேலைப் பளு அதிகரித்தது. அவரவர்களை பள்ளிக்கும் பணிக்கும் அனுப்பும் முன் ராட்டினம் போல் சுழன்றாள் வசந்தா.
அவர்கள் சென்ற பின் மற்ற வேலைகளை செய்து முடித்து மாலை வேளையில் தேவையான சிற்றுண்டிகளைத் தயார் செய்வது வசந்தாவின் பழக்கம். நடுவில் கிடைக்கும் சிறிது நேரத்தில் தையல் வேலை தோட்ட வேலை செய்து கொண்டிருப்பாள்.
ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் போதே அடுத்து என்ன சிற்றுண்டி தயார் செய்ய வேண்டும், மறுநாள் என்ன குழம்பு காய்கறி சமைக்க வேண்டும் என்று வசந்தாவின் மனதில் ஒரு தேடல் ஓடிக்கொண்டிருக்கும்.
வாசு கூட பல நேரங்களில் தன் மனைவியின் உழைப்பு பற்றி அனைவரிடமும் புகழ்ந்து கூறுவார். சிறிது ஓய்வெடு வசந்தா என்று கடிந்து கொள்வார்.
வசந்தா தூங்குவதை யாரும் பார்த்ததில்லை. அவள் வீட்டு வேலை முடிந்து சமையல்கட்டைத் தூய்மை செய்து படுக்க வருவதற்குள் வாசுவும் குழந்தைகளும் தூங்கி இருப்பார்கள்.
குழந்தைகளின் படிப்பிலும் முழு கவனம் செலுத்தி வருவதும் வசந்தா தான். ஒரு வழியாகக் குழந்தைகள் திருமணம் முடித்த பிறகு தன் மனைவியின் வேலை குறையும் என்று எதிர்பார்த்த வாசுவிற்கு ஏமாற்றமே மிச்சம்.
பேரக்குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பும் சேர்ந்தது. இவ்வாறு ஓடி ஓடி உழைத்த வசந்தா நடக்கும் போது கால் தடுமாறி கீழே விழுந்து விட்டாள். காலில் பெரிய கட்டு போடப்பட்டது. காலை அசைக்க முடியவில்லை.
வலி தெரியாமல் இருக்கவும் நன்கு தூங்கி ஓய்வெடுக்கவும் வேண்டி மருத்துவர் ஊசி போட்டார். அந்த ஊசியின் தயவால் வசந்தா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். மருத்துவமனையில் அருகில் இருந்த வாசு வசந்தாவை உற்று நோக்கினார்.
உடல்வலி மறக்க ஊசி மருந்து செலுத்தப்பட்டாலும் நாளைக்குத் தன் மகன் மற்றும் மருமகள்கள் வேலைக்குச் செல்ல வேண்டுமே. பேரக் குழந்தைகள் தன்னைத் தேடுமே என்று வசந்தாவின் மனதில் எண்ண ஓட்டம் ஓடியது.
வசந்தாவின் மனதிற்கு ஓய்வு ஏது?
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)