அதீத அன்பு.. ஒரு நிமிடக் கதை (30)

Su.tha Arivalagan
Oct 08, 2026,10:31 AM IST

- பூரணவள்ளி சேகர்


மூக்கம்மாள் பகலெல்லாம் பழங்கள் விற்றுவிட்டு வருவாள். மாலை நேரத்தில் வந்து குளித்து முடித்து சமையல் செய்து தன் கணவனுக்கு வைத்து விட்டுத் தானும் சாப்பிடுவாள்


மாலையில் மட்டுமே சமையல் செய்வாள். அந்த உணவே மறுநாள் காலையிலும் மதியத்திலும் பயன்படுத்திக் கொள்வாள். கீழே விழுந்து கைகளிலும் கால்களிலும் முறிவு ஏற்பட்டதிலிருந்து சித்தாள் வேலைக்குச் செல்வதில்லை.


அவளுக்குக் குறைந்த வருமானமே போதும். பழங்களை எப்போதும் குறைந்த லாபத்தில் தான் விற்பாள். ஆகையால் வேகமாக விற்றுவிட்டு வந்து சிறிது ஓய்வெடுத்து விட்டு சமையல் செய்வது பழக்கம்.




பழங்களை விற்றுவிட்டுத் திரும்பும் நேரத்தில் நல்ல மழை பெய்தது. எங்கும் நகர முடியாமல்  ஓரிடத்தில் ஒதுங்கி நின்றாள். நிற்கும் போது மனம் படபடத்தது. இன்று சமையல் செய்து தன் கணவருக்குக் கொடுக்க நேரம் ஆகிவிடுமே என்று பதைபதைப்புடன்  தன் கணவனிடம் மனதார மன்னிப்பு கேட்டாள்.


மழை விட்டதும் வேகமாக வீட்டிற்குச் சென்று அவசரமாக சமையல் செய்து தன் கணவனின் புகைப்படத்திற்கு முன் படையல்  வைத்தாள். அவள் கணவன் இறந்ததிலிருந்து இவ்வாறு கணவனுக்குப் படைத்துவிட்டு அந்த உணவையே அவள் உட்கொள்வாள்.


அதீத அன்பின் வெளிப்பாடு இதுதானோ???


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)