மா(மே)ரியம்மாள் பவனம்.. ஒரு நிமிடக் கதை (19)

Su.tha Arivalagan
Sep 21, 2026,01:51 PM IST

- பூரணவள்ளி சேகர்


கண்ணன் கவிதாவைத் திருமணம் முடித்து வந்த பின் தற்போது குடியிருக்கும் வீடு போதாது என்று அருகில் உள்ள கொஞ்சம் பெரிய வீட்டிற்குக் குடித்தனம் புகுந்தனர்.


கண்ணனும் கவிதாவும் பக்தி மிகுந்தவர்கள். தங்களின் வீட்டை ஒரு கோவில் போலப் பராமரிப்பவர்கள். வீட்டின் உரிமையாளர் மிகவும் நல்லவர் தான். ஆனால் வீட்டு வாடகை விஷயத்தில் கண்டிப்புடன் இருப்பார்.


இருவரும் தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் வருமானத்தின் ஒரு பகுதியை வாடகையாகக் கொடுத்து வந்தனர். சேமிப்பு போகத்தான் செலவு என்று இருவரும் உணர்ந்தனர்.


கண்ணனும் கவிதாவும் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று  முடிவுடன் இருந்தனர்.  அதே தெருவில் உள்ள ஒரு  சிறிய வீட்டில் மேரி மட்டும் தனியாகக் குடியிருந்து வந்தார். எந்த திசையில் திரும்பினாலும் அவர் வணங்கும் தெய்வத்தின் படங்களும் சிலைகளும் இருந்தன.




ஒவ்வொரு நொடியிலும் இறைவனை வணங்கி வந்தார். அவரது மகன் வெளிநாட்டில் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் மேரி காலமானார்.


தாய்க்கு காரியங்கள் முடித்த மகன் அந்த வீட்டை விற்றுவிட   ஏற்பாடு செய்தார். இந்தத் தகவல் அறிந்து கண்ணனும் கவிதாவும் தாம் சேர்த்த பணம் மற்றும் வங்கிக் கடனுடன் அந்த வீட்டை வாங்கினர்.


வீடு தூய்மை செய்யப்பட்டு மந்திரங்கள் ஓதி வீட்டில் குடி புகுந்தனர். வீட்டிற்குத் தன் அம்மாவின் நினைவாக மாரியம்மாள் பவனம் என்று பெயரிட்டான் கண்ணன். வீடு முழுக்க  அவர்கள் வணங்கும் இறைவனின் படங்களால் நிரப்பப்பட்டது.


அனைத்துக் கடவுள்களையும் ஒன்றாகவே ஏற்றுக்கொண்டது..  மா(மே)ரியம்மாள் பவனம்.


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)