ஓட்டுநர்.. ஒரு நிமிடக் கதை (56)
- ஒரு நிமிடக் கதை அரசி" பூரணவள்ளி சேகர்
அசோக் தன் மனைவி அமுதாவுடன் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.
அமுதா மிகவும் அமைதியானவள். கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். அசோக் லாரி ஓட்டுநர் பணி செய்து வந்தான்.
சொந்தமாக லாரி வைத்திருந்தான். பொருட்களை இந்தியா முழுதும் கொண்டு செல்லும் உரிமம் இருந்தது. அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். மாதத்தில் முக்கால் பகுதி நாள்கள் வெளியூரில் கழிந்தது.
அமுதா மிகவும் பயந்த சுபாவம் கொண்ட பெண். தனியாக இருப்பதற்கு மிகவும் பயந்தாள். குழந்தைகள் இல்லாததால் அசோக் வெளியூர் சென்று வரும் வரை அமுதா தனியாகவே இருக்கும் படி நேர்ந்தது.
அசோக் அவ்வப்போது அமுதாவுடன் அலைபேசியில் பேசி அவளுக்கு மனத்திடமாக இருக்கும் படி கூறுவான். சில நேரங்களில் தானும் அசோக் உடன் வருவேன் என்று அடம் பிடித்தாள் அமுதா. அமுதாவின் பயத்தைப் போக்கப் பல முயற்சிகள் எடுத்தான் அசோக்.
அமுதா அசோக்கைப் பிரிந்து தனியாக இருக்கும் போது மிகவும் மனச்சோர்வுடன் இருந்தாள். அமுதாவின் மனச் சோர்வு பற்றி மிகவும் யோசித்த அசோக் முடிவில் ஒரு வழியைக் கண்டறிந்தான்.
ஒரு மாதம் வெளியூர் எங்கும் செல்லாமல் மனைவிக்கு நன்கு பயிற்சி அளித்தான். அசோக் உடன் இருந்து கொடுத்த பயிற்சியால் அமுதா மிகவும் திடமானவளாக மாறினாள். அமுதாவின் மனச்சோர்வும் காணாமல் போனது. அசோக் உடன் எப்போதும் இருக்கும் படி ஆனது.
அமுதா முழு பயிற்சி பெற்ற லாரி ஓட்டுநர் ஆனாள்.
இப்போதெல்லாம் அசோக் உடன் சென்று அவன் சோர்வடையும் போதெல்லாம் தைரியமாக லாரியை ஓட்டும் திறமையை வளர்த்துக் கொண்டாள் அமுதா.
சித்திரமும் கைப்பழக்கம் என்பது உண்மையே...!
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)