பாடகி .. ஒரு நிமிடக் கதை (58)

Su.tha Arivalagan
Nov 14, 2026,11:12 AM IST

- "ஒரு நிமிடக் கதை அரசி" பூரணவள்ளி சேகர்


ஆனந்தி ஒரு  இரண்டு மூன்று பேர் மட்டுமே பணி புரியும் ஊறுகாய் கம்பெனியில் வேலை செய்து வந்தாள். வேலை நேரங்களில் அலுப்புத் தெரியாமல் இருக்க சினிமாப் பாடல்களை முணுமுணுப்பாள். உடன் வேலை பார்க்கும் பெண்கள் சத்தமாகப் பாடும் படி கேட்பார்கள்.


குரல் இனிமை குறைவாக இருந்தாலும் பாடல்கள் பாடுவதில் ஆனந்திக்கு அலாதி பிரியம் உண்டு.   அவ்வப்போது தோழிகளின் வேண்டுகோளுக்காகக் கொஞ்சம் சத்தமாகவும் பாடுவாள் ஆனந்தி.


ஊறுகாய் தயாரிப்பு என்பதால் மாஸ்க் அணிந்து கொண்டு பாடுவதால் குரல் இனிமை வெளியே தெரியவில்லை என்று ஆனந்தி குறைபட்டுக் கொள்வாள். அதிக நேரம் ஊறுகாய் உப்பு இவற்றை சுவாசிப்பதாலும் குரல்  சரியாக இல்லை என்று தன்னைத்தானே தேற்றிக் கொள்வாள்.


சினிமாப் பாடல்களின் பாடல் வரிகள் கூட ஆனந்திக்கு முழுமையாகத் தெரியாது. பாடல் வரிகளை நிரப்பத் தானே சில வார்த்தைகளைப் போட்டு நிரப்பிப் பாடுவாள். சில நேரங்களில் லலலலலலா..... என்று பாடி நிரப்புவாள்.




அவளின் மகள்  ரேணு அருகிலுள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள்.  ரேணு தன் பள்ளியில் உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அனைவரிடமும் தன் அம்மா நன்றாகப் பாடுவார் என்று சொல்லி பெருமைபட்டுக் கொள்வாள்.


பள்ளியில் ஒரு நாள் பெற்றோர் ஆசிரியர் கழக சந்திப்பு நிகழ்வுக்கு பெற்றோர் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். அனைத்து பெற்றோரையும் போன்று ஆனந்தியும் கலந்து கொண்டாள்.


விழாவில்  முதல் வகுப்பில் படிக்கும் ரேணு மிகவும் சுட்டிப் பெண். நன்றாகப் படிப்பாள் சிறப்பாகப் பேசுவாள் மற்றும் நன்றாக மழலையர் பாடல்கள் பாடுவாள் என்று ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் தன் வகுப்புக் குழந்தைகள் பற்றிப் பேசும் போது கூறினார்.


அனைவரும் ரேணுவின் மழலையர் பாடலைக் கேட்க விரும்பினர். ரேணு மழலையர் பாடல்களைப் பாடி அனைவரையும் அசத்தினாள் மேலும் தன் அம்மா ஆனந்தி நன்றாகப்  பாடுவதாகக் கூறினாள். அனைவரும் ஆனந்தியையும் ஒரு பாடல் பாட வேண்டினர்.


பள்ளிக்கூட நிகழ்வு மற்றும் நிகழ்ச்சி முடியும் நேரம் ஆதலால் யாருடைய அனுமதியும் இல்லாமல் ஜனகன மண ....

என்று  பாடி முடித்தாள் ஆனந்தி.


அனைவரும் ஙே... என்று விழித்தனர்.!


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)