பலகாரக் கூடை.. ஒரு நிமிடக் கதை (59)
- "ஒரு நிமிடக் கதை அரசி" பூரணவள்ளி சேகர்
சுகுமார் பலகாரங்கள் செய்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். சுகுமாரின் அம்மா ரமா கார பலகாரங்கள் செய்வதில் திறமை வாய்ந்தவர். அது போல சுகுமாரனின் மனைவி பிரபா இனிப்புகள் செய்வதில் வல்லவர். அட்டவணை போட்டு இருவரும் சேர்ந்து பலகாரங்கள் செய்வார்கள். வேலைக்கு இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் இருந்தனர். அவர்கள் பலகாரங்களை பாக்கெட் போடுவார்கள்.
சுகுமார் நான்கு பையன்களை விற்பனைக்கு ஆர்டர் எடுத்து வர வேலைக்கு வைத்திருந்தார். வியாபாரம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்து வந்தார் சுகுமார்.
ஒரு முறை அடுப்பில் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட சிறு கவனக்குறைவால் பலகாரங்கள் எல்லாம் கருகிப் போயின. அடுத்த அடுத்த நாள்களிலும் ஏதோ தவறால் பலகாரங்களின் சுவையும் குறைந்ததை அவர்களே உணர்ந்தனர்.
பண்டிகை நேரத்தில் எடுத்து வந்த ஆர்டர்களுக்கு முறையாக வினியோகம் செய்ய இயலாமல் போனது. வியாபாரம் நொடித்தது. பணியாளர்கள் வேலையை விட்டுச் சென்றனர்.
சிறிதளவு மட்டும் பலகாரங்கள் செய்து அருகிலுள்ளவர் களுக்கு மட்டும் விற்பனை செய்தார்கள். அடுத்த பண்டிகை நெருங்கியது. இந்த பண்டிகைக்கு ஏதாவது செய்து வியாபாரத்தை மறுபடியும் ஆரம்பிக்க வேண்டும் என்று தீவிரமாக யோசித்தார் சுகுமார்.
தீவிர யோசனையில் தனக்குத் தோன்றிய புது உத்தியைத் தன் அம்மா மற்றும் மனைவியிடம் பகிர்ந்தார். சிறப்பான யோசனை என்று இருவரும் ஏற்றனர். முறுக்கு சீடை ஆகியவற்றை மட்டுமே அம்மா தயாரிக்க வேண்டும் என்றும் ஜாங்கிரி லட்டு ஆகியவற்றை மனைவி பிரபா தயாரிக்க வேண்டும் என்றும் முடிவானது.
மூவரும் மட்டுமே பணி செய்ய வேண்டும். ஒருவருக்கு மற்றவர்கள் உதவியாளராக இருக்கலாம் என்று முடிவெடுத்தனர். அம்மா கை முறுக்கு சுற்றினாள். அதனை ஒரு கூடை வடிவில் சுற்றினாள்.
சீடையைத் தனியே தயார் செய்து கைமுறுக்குக் கூடைக்குள் ஐந்தாறு சீடை களைப் போட்டு கூடையும் சீடையும் என்று அச்சிட்டு பேக் செய்தனர். அது போல ஜாங்கிரியையும் ஒரு டம்ளரின் அடிப்பகுதியில் சிறு கூடை வடிவில் தயார் செய்தாள் பிரபா.
சிறு சிறு லட்டு உருண்டைகளைத் தயார் செய்து ஜாங்கிரிக் கூடைக்குள் வைத்து இனிப்புக் கூடை என்ற அச்சிட்டு பேக் செய்தனர்.
கூடை வடிவில் தயார் செய்யப் பட்ட பலகாரங்கள் அனைவரின் மனதையும் கவர்ந்தது. மேலும் நன்கு கவனமுடன் தயாரித்ததால் பலகாரங்களின் சுவையும் கூடியது.
பலகாரக்கூடை, கூடை கூடையாக சுகுமாருக்கு செல்வத்தை அள்ளித் தந்தது.
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)