சரியான பார்வை.. ஒரு நிமிடக் கதை (25)

Su.tha Arivalagan
Oct 02, 2026,12:19 PM IST

- பூரணவள்ளி சேகர்


சரவணனை இனிமேல் சந்திக்கவே கூடாது என்றும் அவன் பெயரை எங்கும் பயன்படுத்தவே கூடாது என்றும் தீர்மானமாகவே இருந்தாள். 

 

தனியாளாகத்  தன் மகளைப் படிக்க வைத்து  ஒரு பட்டம் பெற வைத்தாள் மீனாட்சி. சரவணனும் மீனாட்சியும் ஒரே ஊரில் இருந்தாலும் கணவன் மீதிருந்த கோபம் அவளை அப்படி வாழ வைத்தது.


சரவணனும் மிகவும் நல்லவன் தான்.  இருவரும் நன்கு சம்பாதிப்பவர்கள். திறமையாகக் குடும்பம் நடத்துபவர்கள். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தில் மீனாட்சியின் வார்த்தைகள் ஈட்டியாக மாற சரவணன் கை நீண்டது.


மீனாட்சி தாய் வீட்டிற்கு வந்துவிட்டாள். மீனாட்சியின் தம்பி சரவணனின் நல்ல குணங்கள் பற்றி எடுத்துக்கூறினான்.

ஆனால் மீனாட்சியின் அம்மாவோ உன்னை எப்படி அவன் அடிக்கலாம் என்று மீனாட்சியின் கோபத்திற்கு தூபம் ஏற்றினாள்.




அம்மாவின் சப்போர்ட் தனக்கு இருக்கிறதென அறிந்த மீனாட்சி வீம்பாக இருந்தாள். சரவணன் பலமுறை வந்து பேசிப் பார்த்தான். மன்னிப்பும் கேட்டான். மீனாட்சி மசியவில்லை.


தாயாரின் காலம் முடிந்து விட்டது.  தம்பி தன் மனைவியுடன் தனியாக வாழ்ந்து வந்தான். தற்போது மீனாட்சி தன் மகளுக்குத் திருமண ஏற்பாடு செய்தாள். ஒரே ஆளாக எல்லாவற்றையும் கவனிக்க முடியாமல் தவித்தாள்.

சிலர் சில வழிகளில் ஏமாற்றுவதை அறிந்தும் ஏதும் செய்ய இயலாமல் நிம்மதி இழந்தாள்.


முதல் முறையாகத் தன் தாயின் மேல் கோபம் வந்தது. திருமணப் பத்திரிகையில் சரவணன் மீனாட்சி தம்பதிகளின் மகள் கவிதா என்று  அச்சடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள். சரவணன் மன்னிப்புக் கேட்ட போதே பேசித் தீர்த்திருக்கலாமோ என்று மனதில் போராட்டம் நடத்தினாள்.


வாழ்க்கையைத் திருப்பி வாழ முடியாது ஆனால் திருந்தி வாழமுடியும் என்று  முடிவு செய்தாள். மறுநாள் விடிந்ததும் சரவணனைச் சந்திக்க வேண்டும் என்று தீர்மானம் செய்தாள்.


இன்று கவிதாவின் திருமணத்தில் சரவணனும் மீனாட்சியும் ஒன்றாக!


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)