திருமண விருந்து.. ஒரு நிமிடக் கதை (51)
- ஒரு நிமிடக் கதை அரசி" பூரணவள்ளி சேகர்
கந்தசாமி ஒரு தனியார் கம்பெனியில் வாட்ச்மேன் வேலை பார்த்து தன் மனைவி மற்றும் மகனுடன் மகிழ்வாக வாழ்ந்து வந்தார்.
கணவனின் வருமானத்திற்கேற்ப முறையாக செலவு செய்து தன் மகனை நன்கு படிக்க வைத்தாள் யசோதா.
ஏழ்மையான சூழலில் நன்கு படித்து நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்ற குறிக்கோள் மகன் லோகேஷுக்கு இருந்தது. திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் யசோதா கண்ணை மூடினாள்.
லோகேஷ் பட்டப்படிப்பு முடித்து டெல்லியில் உள்ள ஒரு கம்பெனியில் பெரிய வேலையில் சேர்ந்தான். வேலைக்குச் சேர்ந்து கையில் ஓரளவு அதிக பணத்தை ஊதியமாகப் பெற்றபின் அவனது வாழ்க்கை மட்டுமே பிரதானமாகத் தெரிந்தது.
கந்தசாமிக்கு சம்பிரதாயமாக எப்போதாவது அலைபேசியில் அழைப்பான். மற்றபடி அவன் தனிப்பட்ட ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.
கந்தசாமி பணிக்கு செல்ல அதிக தூரம் செல்ல வேண்டி இருந்ததால் அந்த வேலையை விட்டு விட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வேலைக்குச் சேர்ந்தார். தங்குமிடம் இலவசமானது. திருமண நாட்களில் உணவுப் பிரச்சினையும் இல்லை.
ஒரு நாள் லோகேஷ் கந்தசாமியிடம் பேசும் போது வட நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்யப் போவதாகக் கூறினான்.
கந்தசாமியின் ஒப்புதல் கூட வாங்கவில்லை. தகவலாக மட்டுமே கூறினான். திருமண நாளைக் கூடச் சரியாகச் சொல்லவில்லை.
ஒரு மாதம் கழிந்த நிலையில் டில்லியில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் நண்பர்கள் புடைசூழ லோகேஷின் திருமணம் நடைபெற்றது. அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.
கந்தசாமி தான் வேலை செய்யும் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஒரு ஏழை வீட்டுத் திருமண நிகழ்வில் மணமக்களை வாழ்த்திய நெஞ்சுடன், பரிமாறப்பட்ட உணவைச் சாப்பிட்டார்.
திருமண விருந்து வந்திருந்த அனைவரின் வயிற்றையும் நிரப்பியது.
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)