திருவிழா- ஒரு நிமிடக் கதை (42)

Su.tha Arivalagan
Oct 21, 2026,03:02 PM IST

- பூரணவள்ளி சேகர்


அழகாபுரி என்பது ஒரு சிற்றூர்.  சுமார் ஒரு முன்னூறு நானூறு குடும்பங்கள் மட்டுமே வசித்து வரும் அழகிய கிராமம். விவசாயம் தான் அங்கே முக்கிய தொழில். எவ்வளவு படித்திருந்தாலும் விவசாயம் செய்வதைப் பலர் கை விடுவதில்லை.


அரசுப் பணி மற்றும் நல்ல தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் இளைஞர்கள் ஊரை விட்டு வெளியூரில் இருந்தனர். அந்த ஊரில் பிறந்து வளர்ந்த குமரேசன் ராணுவத்தில் பணியாற்றி வந்ததால் டெல்லியிலேயே குடும்பத்துடன் குடியிருந்தார்.


அவரின் தாய் தந்தை யாரும் கிராமத்தில் இல்லாததால் இங்கு வருவதேயில்லை. ஊரே மறந்துவிட்டது. தன் மகன்கள் இருவரும் வெவ்வேறு ஊர்களில் பொறியியல் படிப்பை முடித்திருந்தனர்.


அவர்களுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து பெண் பார்க்க ஆரம்பித்தார். அவர்களின் மனதிற்குப் பிடித்த பெண் கிடைக்கவில்லை.




ஒரு நாள் பேச்சுவாக்கில் ஊரின் பெருமைகளைத் தன் மகன்களிடம் கூறினார். அவர்கள் இருவருக்கும் கிராமத்தைப் பார்க்கும் ஆசை ஏற்பட்டது. குடும்பத்துடன் கிராமத்திற்கக் கிளம்பினர். அருகில் உள்ள பெரிய ஊரில் தங்கிக் கொண்டு கிராமத்திற்குச் சென்றனர்.


அவர்களை அடையாளம் கண்ட பலர் தங்கள் வீடுகளில் தங்குமாறு அழைத்தனர். குமரேசனின் பெரியப்பா மகள் தங்கள் வீட்டிற்கு வரும் படி அழைத்துச் சென்று விருந்து கொடுத்தார். ஒரு வாரம் கழித்து அங்கிருந்து வீடு திரும்பினர்.


சில மாதங்களுக்குப் பிறகு ஊரில் உள்ள அம்மன் கோயில் திருவிழாவிற்கு அழைப்பு வந்தது. திருவிழாவில் குமரேசன் மனைவியுடன் கலந்து கொண்டார். திருவிழாவில் இரண்டு பெண்கள் நவநாகரீகமாக இருந்தனர். அவர்களைப் பற்றி விசாரிக்கும் போது அவர்கள் குமரேசனின் அக்கா பேத்திகள் என்றும் அறிந்தார்.


புனேயில் பெண்களின் குடும்பம் இருப்பதாக அறிந்து பெண் கேட்டார். மகன்கள் இருவரும் பெண்ணின் புகைப்படம் பார்த்ததும் சிரித்தனர்.அவரவர் படித்த கல்லூரியில் படித்த ஏற்கெனவே மகன்களுக்குத் தெரிந்த பெண்கள் என்பதை அறிந்த குமரேசனும் மனைவியும் மகிழ்ந்தனர்.


ஏற்கெனவே தெரிந்த பெண்ணைத் திருமணம் பேச ஓர் ஊர்த் திருவிழா உதவியது.


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)