உயர்ந்தவர்.. ஒரு நிமிடக் கதை (60)

Su.tha Arivalagan
Nov 18, 2026,01:40 PM IST

- பூரணவள்ளி சேகர்


பாண்டி அருகில் இருந்த அப்பார்ட்மெண்டில் செக்யூரிட்டி வேலை பார்த்தவர். தன் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்தவர். தற்போது மனைவி இறந்து விட்டார். பிள்ளைகள் இவரைக் கைவிட்டனர்.


மூன்று ஆண் பிள்ளைகளும் தங்கள் மனைவி குழந்தை என்று தனியே வசித்தனர். பாண்டியை உடன் வைத்துக் கொள்ள மூவரும் முன் வரவில்லை. பாண்டியால் வயது முதிர்வால்  வேலை செய்ய முடியவில்லை.


தங்குவதற்கு இடம் இல்லாமல் பேருந்து நிலையம் மற்றும் மர நிழலில் தங்கினார் பாண்டி. உணவிற்காக ஒவ்வொரு வீட்டிலும் கையேந்தினார். கிடைக்கும் உணவை உண்டு வாழ்க்கை நடத்தினார்.




ஒரு அழுக்கு உடையும் சிறு பிளாஸ்டிக் தட்டு மட்டுமே சொந்தமாக இருந்தது. தங்கி இருந்த ஊரில் உணவு கிடைக்காத நிலையில் பக்கத்து ஊருக்கு நடந்து சென்றார்.


ஒரு பணக்கார வீட்டில் நிச்சயதார்த்த விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. பல வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. ஒவ்வொருவரின் இலையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட உணவுகள். அவற்றில் பாதிக்கும் மேல் வீண் ஆயின.


பாண்டி வரும் வழியில் இருந்த அந்த வீட்டில் உணவிற்காகக் கையேந்தினார். வீட்டில் இருந்த சிலர் பாண்டியை நகர்ந்து செல்லுமாறு விரட்டினர். பாண்டிக்கு பசி மயக்கம் இருந்தது. வீட்டில் இருந்து வந்த உணவுகளின் வாசம் பாண்டியை நகர விடவில்லை.


வீட்டினர் விரட்டிய தால் சிறிது நகர்ந்து சென்று ஒரு மர நிழலில் ஒதுங்கினார்.பசியால் உலகமே சுழன்றது. என்ன உலகம் இது? இப்படி ஆடம்பரமாக நிகழ்வு நடக்கும் இடத்தில் எனக்கு ஒரு பிடி உணவு தரக்கூடாதா?  என்று மனதில் நினைத்து வருந்தினார். 


பண வசதி படைத்த மனிதர்களிடத்தில் பசித்தவருக்கு உணவளிக்கும் மனமில்லையே என்று மனதில் புலம்பினார். வீணான உணவாவது கிடைக்காதா என்று ஏக்கப் பார்வை பார்த்தார் பாண்டி.


வீணடிக்கப்பட்ட உணவுகளுடன் சாப்பிட்ட இலைகளை வேலையாள் கொண்டு வந்து ஓரிடத்தில் கொட்டினான். அந்த இடத்தில் இருந்த கேட் வழியே அந்த உணவுகளை எடுத்துச் சாப்பிடலாம் என்று பாண்டி அதன் அருகில் சென்றார்.


கேட்டிற்குள் இருந்த உணவு பாண்டியின் கைகளுக்கு எட்டவில்லை. உணவுப் பொருட்கள் அருகில் இருந்தும் எடுத்துச் சாப்பிட முடியவில்லையே என்று பாண்டி மிகவும் வருந்தினார்.


அந்த வழியாக வந்த நாய் ஒன்று கேட்டிற்குள் நுழைந்தது. தனக்குத் தேவையான உணவைச் சாப்பிட்டதுடன் இருக்கும் இலைகளை பாண்டியின் பக்கம் களைத்து விட்டது.


பாண்டி அருகில் இருந்த இலைகளில் மீதமுள்ள உணவுகளைச் சாப்பிட்டார். அவரின் பசி ஓரளவு தீர்ந்ததும் தான் பாண்டி முழுமையாகக் கண்ணைத் திறந்து பார்த்தார்.


அவரது கண்களில் உணவளித்த நாய் மிகவும் உயர்ந்த தெய்வம் போல் தோன்றியது.


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)