பாட்டி வைத்தியம் (ஒரு நிமிடக் கதை)

Su.tha Arivalagan
Mar 19, 2026,12:40 PM IST

- பூரணவள்ளி சேகர்


தன் அறிவுத் திறத்தால்  மருத்துவ நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் படித்து முடித்து மருத்துவ மேற்படிப்பும் முடித்து சென்னையில் உள்ள ஒரு புகழ் பெற்ற மருத்துவ மனையில் திறம்படப் பணிபுரிகிறார் மருத்துவர் கண்ணன்.


அவர் நோயாளிகளிடம்  கனிவாகவும் அனுசரனையாக  நடந்து கொள்வார். அவர் பணியாற்றிய மருத்துவ மனையில் மருத்துவ கருத்தரங்கு ஒன்று ஏற்பாடானது.


கருத்தரங்கிற்காக ஏற்பாடுகள் அனைத்தையும் முன்னின்று கவனித்துக் கொண்டிருந்தார் மருத்துவர் கண்ணன்.

விழா நடைபெறும் முதல் நாள் இரவில் விழா நிகழ்ச்சி பற்றிய சிந்தனையில் சரியாகத் தூங்கவில்லை அவர்.

விழா நிகழ்வு  சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.




இரவு தூக்கம் இன்மை மற்றும் விழா பற்றிய அழுத்தம் ஆகிய காரணங்களால் தலைவலி அதிகமாக இருந்தது.

காப்பி குடித்தார். வலி குறையாததால் மாத்திரை ஒன்றையும் விழுங்கினார். வலி குறைந்தபாடில்லை.


மற்றவர்களின் கை நாடி பிடித்து பிணி தீர்க்கும் அவரின் தலைவலி தீரவில்லை. கருத்தரங்கு நிகழ்வை முடிந்த வேகத்தில் வீட்டிற்கு வந்து  நுழைந்தார். அவரின் வாடிய முகத்தைப் பார்த்த கமலா பாட்டி என்னவென்று வினவினார்.


தலைவலி பற்றிக் கூறிய மருத்துவர் சோஃபாவில் சாய்ந்து படுத்திருந்தார். தான் அறிந்த மூலிகைகள் பலவற்றை சேர்த்துக் கொதிக்க வைத்துப் பாதியாக வற்றிய கஷாயத்தை ஒரு டம்ளரில். வடிகட்டிக் கொண்டு வந்து குடிக்கும் படி கூறினார் கமலா பாட்டி. 


கஷாயத்தைக் குடித்த தன் பேரனின் தலையை மடியில் தாங்கி மெதுவாகப் பிடித்துவிட்டு அவரை அமைதிப் படுத்தினார் கமலா பாட்டி. மருத்துவரின் தலைவலி எங்கோ பறந்து சென்றிருந்தது.