வாக்குப்பலிதம் (ஒரு நிமிடக் கதை)

Su.tha Arivalagan
Mar 05, 2026,02:09 PM IST

- பூரணவள்ளி சேகர்


இரவு நடுநிசி நேரம் வெளியில் ஒரு குடுப்பைக்காரன்  வாக்குச் சொல்லிக் கொண்டிருந்தான். அதைக் கேட்ட கவிதாவும் கண்ணனும் சிறிது பயந்தனர்.   அவன்  சொன்னதில் இந்தத் தெருவில் இன்று ஒரு மரணம் ஏற்படும் என்று சொன்னது மட்டும் காதில் விழுந்தது. மற்றவை ஒன்றும் புரியாமல் இருந்தனர். 


அவர்களுக்கு அந்தத் தெருவில் கடைசி வீட்டில் இருக்கும் கமலா பாட்டிதான் நினைவில் வந்தாள். கடந்த ஒரு வாரமாக கமலா பாட்டி மிகவும் மோசமான நிலையில் இருந்தாள். இரவில் வந்த குடுகுடுப்பைக்காரன் மீண்டும் மறுநாள் காலையில் வந்து முதல் நாள் இரவில் கூறியனவற்றைக் கூறிச் சென்றான்.




கண்ணன் அவசர வேலை இருப்பதாகக் கூறி அலுவலகத்திற்கு சீக்கிரமாகக் கிளம்பிச் சென்றான். இடையிடையே இரவில் கேட்ட வார்த்தைகள் நிழலாடின. பிற்பகலில் அலுவலக வேலைகளுக்கு இடையே அதை மறந்தான். வேலை முடித்து வீட்டிற்கு வந்தபோது அந்தத் தெருவில் உள்ள பலர் கூட்டம் கூட்டமாக பேசிக் கொண்டிருந்தனர்.  அதைக் கண்ட கண்ணனுக்கு  கமலா பாட்டியின் நினைவு வந்தது. 


வீட்டிற்குள் நுழைந்த கண்ணன் கவிதாவிடம் என்ன நடந்தது என்று விசாரித்தான். காலையில் குறி கூறிய குடுகுடுப்பைக்காரன் அந்த வழியாக வந்த பிரேக் பிடிக்காத லாரியில் அடிபட்டு இறந்து விட்டதாகக் கவிதா கூறினாள்.


குடுகுடுப்பைக்காரனின் வாக்குப்  பலித்தது.