வாரிசு!

Su.tha Arivalagan
Feb 28, 2026,01:04 PM IST

- பூரணவல்லி சேகர்


திருமணம் முடிந்து ஆண்டுகள் பல ஆன  பின்பும் கொஞ்சி மகிழ குழந்தை இல்லை என்கிற ஏக்கத்துடன் வாழ் நாளைக் கழித்துக் கொண்டிருந்தனர் கவிதாவும் கண்ணனும். இருவரும்  ஒருவருக்கொருவர் குழந்தையென்று நினைத்து மகிழ்வுடன் வாழ்ந்து கொண்டிருந்தனர். 


ஆண்டுகள் 10 ஆன பின்பும் உறவினர்களின் பேச்சுகளால் மனம் தடுமாறி அவ்வப்போது ஒருவருக்கொருவர் தெரிந்தும் தெரியாமலும் அழுது கொண்டிருந்தனர். மற்றவர்கள் கூறும் பூஜைகளை மனம் நிறைந்து செய்து வந்தனர். ஊரில்  உள்ள மிகப்பெரிய மருத்துவமனையில் மகப்பேறுக்காக மருத்துவமும் பார்த்தனர். செல்வங்கள் பல இருந்தும் பிள்ளைச் செல்வம் இல்லை என்ற ஒரு குறை அவர்கள் இருவரையும் வாட்டிக் கொண்டிருந்தது. 


இந்த முறை மருத்துவமனையில் பரிசோதனை முடித்து வந்து பரிசோதனை முடிவுகள் வரும் நாளையும் மருத்துவரை சந்திக்கும் நாளையும் எதிர் பார்த்துக் காத்திருந்தனர். அன்று காலையில் நல்ல காலம் பிறக்குது. இந்த வீட்டின் குலம் தழைக்க போகுது என்ற யாசகப் பெண்ணின் குரலைக் கேட்டு மகிழ்ந்து கை நிறைய பணத்தை அள்ளி கொடுத்து மகிழ்ந்தாள் கவிதா.




பரிசோதனை முடிவுகளைப் பெற்று மருத்துவரை சந்திக்கும் போது இந்த முறையும் ஏமாற்றமே என்பதை அறிந்து மிகவும் வேதனையுடன் வீட்டிற்கு வந்த இருவரும் தோட்டத்திற்கு சென்று சிறிது இளைப்பாறினர். இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறி தேற்றிக்  கொண்டனர்.  கவிதாவை மனம் மாற்ற நிறைய முயற்சிகள் எடுத்த அவளின் கணவன் ஒவ்வொரு மரங்களிடமும் சென்று பேசும்படி கூறினான்.


ஒவ்வொரு பூக்களையும் கண்டு ரசிக்கும்படி அவளைத் தேற்றினான். முதல் நாளில் ஒரு யாசகப் பெண் கூறிய குறியை நினைத்து மகிழ்ந்திருந்தேன். ஆனால் அது நடக்கவில்லையே என்று மனம் வெதும்பினாள் கவிதா. தோட்டத்தை சுற்றிப் பார்த்த கணவன் கண் முன் அவர்கள் வீட்டு தோட்டத்திலிருந்து வாழைமரம் குலை தள்ளி இருந்தது கண்டு மகிழ்ந்து நம் வீட்டிற்கு வாரிசு வந்து விட்டது என்று தன் மனைவியிடம் கூறினான். 


வாழைக்குலை தள்ளியதைக் கண்ட கவிதா பிள்ளைப்பேறு கவலையை விடுத்து இருவரும் மகிழ்வுடன் கொண்டாடினார்கள்  ஆனால் அடுத்த ஆண்டு அவர்கள் வீட்டில் மழலை தவழும் என்பதை அறியாமல்...!