மகள் .. ஒரு நிமிடக் கதை (63)

Su.tha Arivalagan
Nov 23, 2026,10:38 AM IST

- பூரணவள்ளி சேகர்


மீனாட்சி தன் வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு மாலை நேரத்தில் செல்வது வழக்கம்.  இறைவனை தரிசனம் செய்து முடித்து விட்டு அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து இருப்பார் மீனாட்சி பாட்டி.


மீனாட்சிக்கு ஒரு மகன். அவர் பெயர் வினோத். ஒரு ஓட்டலில் மேலாளராகப் பணி புரிந்து வந்தார். வினோத்திற்கு சாந்தியை திருமணம் செய்து வைத்தார் மீனாட்சி பாட்டி. திருமணம் முடித்து ஆறேழு மாதங்கள் ஆகி விட்டது.


வினோத் ஒரு வயதாக இருக்கும் போதே கணவனை இழந்த மீனாட்சி மிகவும் சிரமப்பட்டுத் தன் மகனை பட்டதாரி ஆக்கினாள்.


மீனாட்சியின் கடினமான வாழ்க்கை பற்றி வினோத் நன்கு அறிவார். தன் மனைவி சாந்தியிடமும் தன் அம்மாவின் தியாக வாழ்க்கை பற்றி கூறி இருந்தார் வினோத்.


மீனாட்சி பாட்டி கோவிலிலிருந்து வீட்டிற்குத் திரும்பி வந்த போது மகனின்  பேச்சு காதில் விழுந்ததால் சற்று நிதானித்தார்.




தான் வேலை செய்யும் ஹோட்டலின் ஒரு கிளையை டெல்லியில் ஆரம்பிக்கின்றனர்.  அங்கே செல்ல நிறைய போட்டி நிலவுகிறது. எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.


அப்படி வாய்ப்பு கிடைத்தால் அடுத்த வாரம் டெல்லி செல்ல நேரிடும் என்று தன் மனைவி சாந்தியிடம் கூறினார் வினோத். ஹோட்டலின் அருகில் உள்ள அவுட் ஹவுசில் நாம் இருவர் மட்டுமே குடியிருக்க முடியும்.


அம்மாவை இங்கேயே ஏதாவது ஒரு ஆசிரமத்தில் சேர்த்து விட வேண்டும் என்று கூறினார்.  நாம் குடி போன பிறகு அங்குள்ள சூழல் மற்றும் நம் பொருளாதார வசதியை அதிகரித்த பின்னர் அம்மாவையும் அழைத்துச் சென்று விடலாம் என்றும் கூறினார்.


நீங்கள் மட்டும் சென்றால் என்ன செய்வீர்கள் என்று சாந்தி கேட்டாள். நான் மட்டும் சென்றால் ஹோட்டலிலேயே சாப்பிட்டும் கொள்ளலாம் தங்கியும் கொள்ளலாம் என்று வினோத் பதில் கூறினார். அப்படியே நீங்கள் மட்டும் சென்றால் சம்பளப் பணம் அதிகம் சேமிக்கலாமே. வயதான காலத்தில் அம்மாவை ஏன் ஆசிரமத்தில் சேர்க்க வேண்டும்  என்று கேட்டாள் சாந்தி.


அம்மா தன்னலம் கருதாது உங்களை வளர்த்து இருக்கிறார். அப்படிப் பட்ட அம்மாவை ஆசிரமத்தில் விடுவதாக நாம் நினைக்கவே கூடாது. நம் பொருளாதார நிலை உயரும் வரை நீங்கள் அங்கே உழையுங்கள். நான் மாலையில் அருகிலுள்ள குழந்தைகளுக்கு டியூசன் சொல்லி கொடுக்கிறேன்.  அம்மாவை நானே நன்கு கவனித்துக் கொள்கிறேன் என்று சாந்தி சொன்னாள்.


வினோத் தன் மனைவியின் புத்திக்கூர்மை அறிந்து மகிழ்ந்தார். இந்த உரையாடலைக் கேட்ட மீனாட்சி பாட்டி தனக்கு சாந்தி என்ற மருமகள் வடிவில் ஒரு மகள் கிடைத்து இருக்கிறாள் என்று மகிழ்ந்தார். தான் கும்பிட்ட சாமிகளுக்கு நன்றி கூறினார்.


வினோத் டெல்லி சென்ற பின் தன் மகளுக்கு சிரமம் இல்லாமல் இருக்கும் படி பார்த்துக் கொண்டார் மீனாட்சி பாட்டி.


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)