Pooranavalli Sekar Tamil Short Story: துணிச்சலான முடிவு !

Su.tha Arivalagan
May 02, 2026,01:13 PM IST

- பூரணவள்ளி சேகர்


கவிதாவும் கண்ணனும் தன் சொந்த முயற்சியால் கட்டிய வீட்டில் தன் இரு மகன்கள் உடன் இனிமையாகக் குடும்பம் நடத்தி வந்தனர்.


தன் வீட்டின்  ஓரத்தில் ஒரு சிறிய இட்லி கடையை நடத்தி வந்தனர். தங்கள் உழைப்பை மூலதனமாகக் கொண்டு அயராது உழைத்தனர்.


அதன் மூலம் கிடைத்த வருவாயில் தன் மகன்களை நன்கு படிக்க வைத்தனர். மகன்கள் இருவரும் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருந்தனர். 


கண்ணனும் கவிதாவும் தங்கள் உழைப்பினால் சேர்த்த செல்வத்தில் தாம்பரத்தின் அருகில் ஒரு சிறிய வீட்டை வாங்கினர். 


சொந்த வீடு வாங்குவதற்காக பெறப்பட்ட கடனை அடைப்பதற்காக மேலும் கடினமாக உழைத்தனர். கண்ணன் கவிதா இருவருக்கும் முழு நேரமும் தன் கடைக்காக உழைப்பதும் தன் மகன்களை நன்கு படிக்க வைத்து நல்ல வேலையில் அமர வைப்பதும் மட்டுமே சிந்தனையில் இருந்தது.




இருவரின் உழைப்பால் வீட்டுக் கடன் முடிவுக்கு வந்தது. அதுபோல மகன்கள் இருவரும் படித்து முடித்தவுடன் அரசாங்க பணியில் சேர்ந்தனர். முதல் மகன் கவின் மதுரையிலும் இரண்டாம் மகன் விமல் திருச்சியிலும் பணி புரிந்து வந்தனர்.


காலம் கனிந்த பின் இருவருக்கும் திருமணம் முடித்து அழகு பார்த்தனர் கண்ணனும் கவிதாவும். மகன்கள் அரசாங்க வேலையில் இருந்த போதும் தங்களுக்கு வாழ்வளித்த இட்லி கடையை தொடர்ந்து நடத்தி வந்தனர் இருவரும். 


ஓயாத பணி மற்றும் வயது காரணமாக நோய்வாய்ப்பட்டு இருந்தாள் கவிதா. தன் மனைவி துணை இல்லாமல் தான் மட்டும்  இட்லி கடையை நடத்த மிகவும் சிரமப்பட்டார் கண்ணன்.


தன் நண்பரின் மகன் கணேஷ் சரியான வேலையின்றி சிரமப்படுவதாலும் சரியான வழிகாட்டுதல் இன்றி இருப்பதையும் கண்டார்  கண்ணன். தன் மனைவியின் ஒப்புதலுடன் கணேஷை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தனது கடையை தொடர்ந்து நடத்தும்படி கூறினார் கண்ணன்.


கண்ணனின் வழிகாட்டுதலுடன் கணேஷ் கடையைத் தொடர்ந்து சிறப்பாக நடத்தி வந்தான். தன் தாய் தந்தை போன்று இருவரையும் மதித்து நடத்தினான். காலத்தின் பிடியில் கவிதா கண் மூடினாள். கண்ணன் மட்டும் தனியே வீட்டில் இருந்தார்.


மகன்கள் இருவரும் சென்னைக்குப் பணி மாறுதல் பெற்று வந்து வெவ்வேறு பகுதிகளில் குடியேறி இருந்தனர். மகன்கள் இருவருக்கும் தந்தை குடியிருக்கும் வீடு தேவை இல்லாமல் இருந்தது. எனவே தன் தந்தையை அணுகி தாம்பரத்தில் உள்ள வீட்டை விற்று விடலாம். 


நீங்கள் மாதாமாதம்  ஒருவர் வீட்டில்  சரிசமமாக தங்கிக் கொள்ளலாம் என்று தங்களின் யோசனையைக் கூறினர்.

கண்ணன் ஒரு நாள் யோசித்து விட்டு தன் முடிவை கூறுவதாகச் சொன்னார். தந்தையின் முடிவிற்காக மகன்கள் இருவரும் காத்திருந்தனர். 


இந்த வீடு நானும் என் மனைவியும் எங்கள் உழைப்பால் வாங்கிய வீடு. இதனை விற்க என் மனம் ஏற்கவில்லை. 

நீங்கள் எனக்கு கொடுக்கும் வாய்ப்பை நான் உங்களுக்கு தருகிறேன். உங்களின் விருப்பம் உள்ளவர்கள் இந்த வீட்டில் வந்து மாத மாதம் சரிசமமாக தங்கிச் செல்லலாம். என் காலம் உள்ளவரை இது தொடரும். இங்கு வந்து தங்குவது குறித்து முடிவு செய்வது அவரவர் விருப்பம் என்று தன் முடிவைக் கூறினார் கண்ணன்.


தந்தையின் முடிவை கேட்ட மகன்கள் இருவரும் தலை குனிந்தனர். தங்களின் தவறை உணர்த்து மன்னிப்புக் கேட்டு தந்தையின் இறுதி நாள்களை அவர் மகிழ்வுடன் கழிக்க வேண்டும் என்று நினைத்தனர். வேலை நாள் தவிர விடுமுறை நாட்களில் இரு மகன்களும் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்து தந்தையுடன் தங்கி மகிழ்ந்தனர்.


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)