புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு.. செங்கோட்டையன் இலாகா மாற்றம்
சென்னை : தமிழ்நாட்டில் இன்று காலை புதிதாக பதவியேற்ற 23 அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் செங்கோட்டையனுக்கு அளிக்கப்பட்டிருந்த நிதித்துறை மாற்றப்பட்டு, அதை விட சக்தி வாய்ந்த வருவாய்த்துறை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மே 10ம் தேதி முதல்வர் சி.ஜோசப் விஜய் தலைமையில் 10 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது. இவர்களுக்கு ஏற்கனவே இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்பு மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேருடன் சேர்த்து மொத்தம் 23 பேர் இன்று பதவியேற்றனர். இவர்களுக்கான இலாக்காக்கள் உடனடியாக ஒதுக்கப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்று பதவியேற்ற புதிய அமைச்சர்களுக்கான இலாகா விவரங்களை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது:
1. ஸ்ரீநாத் - மீன்வளத்துறை
2. விஜயலட்சுமி - பால்வளத்துறை
3. கமலி - கால்நடைத்துறை
4. ரஞ்சித்குமார் - வனத்துறை
5. மரிய வில்சன் - நிதித்துறை
6. ரமேஷ் - இந்து சமய அறநிலையத்துறை
7. வினோத் - வேளாண் துறை
8. ராஜீவ் - சுற்றுச்சூழல் துறை
9. காங்கிரஸ் விஸ்வநாதன் - உயர்கல்வித்துறை
10. விஜய் தமிழன் பார்த்திபன் - போக்குவரத்து துறை
11. விக்னேஷ் - மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை
12. ராஜ்குமார் - வீட்டுவசதித்துறை
13. காந்திராஜ் - கூட்டுறவுத்துறை
14. மதன்ராஜா - சிறு,குறு, நடுத்தர தொழில்துறை
15. ஜெகதீஸ்வரி - சமூகநலன், மகளிர் நலத்துறை
16. ராஜேஷ்குமார் - சுற்றுலாத்துறை
17. விஜய் பாலானஜி - கைத்தறி, ஜவுளித்துறை
18. லோகேஷ் தமிழ்செல்வன் - வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை
19. குமார் - AI, தகவல் தொழில்நுட்பத்துறை
20. தென்னரசு - வெளிநாடு வாழ் தமிழர் நலன்
21. சம்பத் குமார் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
22. முகமது பர்வேஸ் - தொழிலாளர் நலத்துறை
23. சரத்குமார் - மனிதவளத்துறை
செங்கோட்டையனிடம் இருந்த நிதித்துறை, மரிய வில்சனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் செங்கோட்டையனுக்கு வருவாய்த்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சகம் என்பது வெறும் கோப்புகளுக்கு ஒப்புதல் தருவது போலத்தான் இருக்கும். அதேசமயம், வருவாய்த்துறைதான் மிக முக்கியமானது. அரசின் வருவாயை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும் என்பதற்காகவே அனுபவம் வாய்ந்த செங்கோட்டையனை அந்தத் துறைக்கு முதல்வர் மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.