கிழக்கு ரஷ்யாவை அதிர வைத்த பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை
அலாஸ்கா: கிழக்கு ரஷ்யாவில் உள்ள பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-காம்சட்ஸ்கி அருகே ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக அலாஸ்காவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-காம்சட்ஸ்கி நகரத்திற்கு கிழக்கே 128 கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில், 18ம் தேதி இரவு 11:58 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அலாஸ்காவின் மேற்கு அலூசியன் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அமெரிக்கா மற்றும் கனடாவின் மற்ற பகுதிகளுக்கு சுனாமி ஆபத்து இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிய சுனாமி எச்சரிக்கை மையம், "மிகப் பெரிய அலைகள் வரும் என எதிர்பார்க்க வேண்டாம். ஆனால், வலுவான நீரோட்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே மக்கள் கடலைவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளது.
முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு, அதே பகுதியில் மேலும் இரண்டு நிலநடுக்கங்கள் (5.8 மற்றும் 5.4 ரிக்டர் அளவில்) ஏற்பட்டன. இது மக்களை மேலும் அச்சமடையச் செய்துள்ளது. இதுவரை, இந்த நிலநடுக்கத்தால் பெரிய சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.