ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 620 பேர் பலி!
காபூல்: ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரைக்கும் 620 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் நேற்று நள்ளிரவில் திடீர்ரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியிருந்தது.கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அமெரிக்க வியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, நிலநடுக்கம் நேற்று இரவு 11.47 மணிக்கு உணரப்பட்டுள்ளது. ஜலாலாபாத்திற்கு கிழக்கே 27 கி.மீ தூரத்தில் ஏற்பட்டது.
ஜலாலாபாத் நகரத்தில் சுமார் 2, 00,000 மக்கள் வசிக்கின்றனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மூன்று முறை நில அதிர்வு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தில் இதுவரைக்கு சுமார் 620 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 1000த்திற்கு மேற்பட்டவர்கள் இந்த நிலநடுக்கத்தின் போது படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆப்கானிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக 622 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 1,000 பேர் காயமடைந்தனர். பல்வேறு இடங்களில் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்துள்ளதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.