தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு
சென்னை : தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) தனது தேர்தல் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், நாளை முதல் விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும். இந்த விருப்ப மனுக்களுக்கான கட்டண விவரங்களையும் கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழக சட்டமன்றத் தேர்தலில் பொதுத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு கட்டணம் ரூ.15,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல் தனித் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் ரூ.10,000 கட்டணமாகச் செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கக் கடைசித் தேதியையும் கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் பிப்ரவரி 12-ம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு சந்திக்கும் மிக முக்கியமான தேர்தல் இது என்பதால், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. விருப்ப மனு விநியோக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர்.
இதுவரை யாருடன் கூட்டணி என தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. முதலில் ஜனவரி மாதம் அறிவிக்க உள்ளதாக பிரேமலதா கூறிய நிலையில், பிறகு பிப்ரவரி 03ம் தேதி அறிவிக்க போவதாக கூறி இருந்தார். ஆனால் பிப்ரவரி 03ம் தேதியும் அறிவிக்கவில்லை. இதனால் தேமுதிக எந்த கூட்டணியில் இணைந்து போட்டியிட போகிறது என தெரியாமல் அக்கட்சி தொண்டர்கள் குழப்பமான மனநிலையிலேயே தற்போது வரை இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் விருப்பமனுக்கள் விநியோகம் துவங்க உள்ளதாக கட்சி தலைமை அறிவித்தால், தலைமையின் நிலைப்பாடு என்ன என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது.