தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமனம்.. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பு!

Manjula Devi
Apr 30, 2025,06:28 PM IST

தருமபுரி: தேமுதிக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக  விஜய பிரபாகரனும்,  பொருளாளராக எல்.கே சுதீஷும் நியமனம் செய்து அக்கட்சி பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார் .


2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக என பல்வேறு கட்சிகளும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இன்று நடைபெற்றது.  




பாலக்கோடு வெள்ளிச்சந்தை கே.வி.மஹாலில் நடைபெற்ற இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.அதில் விஜய பிரபாகரனுக்கு இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் எல்.கே சுதீஷ் கட்சியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 


விஜயகாந்த் மறைவுக்குப் பின்னர் நடைபெறும் முதல் பொதுக்குழுக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த பொதுக்குழுக் கூட்டம்  பல முக்கிய முடிவுகளை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார் .


பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள்:


பொதுக்குழுக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்டந்தோறும் விஜயகாந்த் சிலைகளை நிறுவுவது, சென்னையில் உள்ள 100 அடி சாலைக்கு விஜயகாந்த் பெயர் சூட்டப்பட வேண்டும், விஜயகாந்த்துக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்பது சில முக்கிய முடிவுகள் ஆகும்.


தானும் விஜய பிரபாகரனும் அனைத்து சட்டசபைத் தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்திக்கப் போவதாகவும் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.