மகா கும்பமேளாவில் புனித நீராடிய.. பிரேமலதா விஜயகாந்த் குடும்பத்தினர்..!
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ்ஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் குடும்பத்தினர்கள் புனித நீராடினர்.
மகா கும்பமேளா 2025 இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ளது. கடந்த மாதம் ஜனவரி 13ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு பிப்ரவரி 26ம் தேதியுடன் நிறைவடைகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெரும் மகா கும்பமேளாவை முன்னிட்டு இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த மகா கும்பமேளாவில் இதுவரைக்கும் 62 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடி வருகின்றனர்.
இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள் என 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கும்பமேளாவில் சமீபத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இது குறித்து மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த மகா கும்பமேளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில், பிரயாக்ராஜ்ஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், சகோதரர் சுதீஷ் குடும்பத்தினர், ஆகியோர் இன்று புனித நீராடியுள்ளனர். இவர்கள் பங்கேற்று நீராடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.