சென்னையில்.. பகுதி நேர ஆசிரியர்கள் கைதுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!

Meenakshi
Jul 18, 2025,03:41 PM IST

சென்னை: பகுதி நேர ஆசிரியர்கள் கைது செய்யப்படுவது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார்.


பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 8ம் தேதி முதல் 100க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை காவல்துறையினர் தினசரி கைது செய்து அழைத்துச் சென்று பின்னர் விடுவிடுத்து வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 




இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பகுதி நேர ஆசிரியர்கள் கைது செய்வதை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தின் போது காவல்துறையினர் காலையில் கைது செய்வதும், மாலையில் விடுவிப்பதும் தினந்தோறும் வாடிக்கையாக உள்ளது. இதை தேமுதிக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்.  ஆளும் திமுக அரசு, கொடுத்த வாக்குறுதியாக 181ல் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார் என்றும் ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ளவில்லை.


தேர்வு எழுதி தகுதி பெற்ற அவர்களுடைய அடிப்படை உரிமையைக் கேட்டதை அலட்சியப் படுத்தாமல், கண்ணீர் மல்க வாழ்ந்து கொண்டிருக்கும் 160 ஆயிரம் குடும்பங்களை காக்க வேண்டியது இந்த அரசின் கடமை. இந்த அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உரிய ஆவணம் செய்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.