ரபேல் விமானத்தில் பறந்தார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.. கலாம், பிரதீபா பாட்டீல் வழியில் சாதனை
அம்பாலா: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, இன்று ரபேல் போர்விமானத்தில் பறந்து புதிய சாதனை படைத்தார்.
முன்னாள் குடியரசுத் தலைவர்கள் அப்துல் கலாம், பிரதீபா பாட்டீல் ஆகியோர் இதற்கு முன்பு சுகோய் போர் விமானங்களில் பறந்து சாதனை படைத்துள்ளனர். அந்த தலைவர்களுக்குப் பிறகு தற்போது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, ரபேல் போர் விமானத்தில் பறந்து அசத்தியுள்ளார்.
ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து ரஃபேல் போர் விமானத்தில் பயணித்து இந்த சாதனையைப் படைத்தார் குடியரசுத் தலைவர் முர்மு.
இந்த விமானப்படைத் தளம் முக்கியத்துவம் வாயந்ததாகும். சில மாதங்களுக்கு முன்பு பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பதற்காக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மிகப் பெரிய ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியபோது, இந்த விமானப்படை தளத்தில் இருந்துதான் ரஃபேல் விமானங்கள் புறப்பட்டுப் போய், எல்லை தாண்டிய பயங்கரவாத முகாம்களை அழித்தன என்பது நினைவிருக்கலாம்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தளத்திலிருந்து குடியரசுத் தலைவர் போர் விமானத்தில் பயணப்பட்டது முக்கியத்துவம் வாய்நததாக கருதப்படுகிறது. சமீபத்தில் கூட பிரதமர் நரேந்திர மோடியும் போர்க் கப்பலுக்கு விஜயம் செய்து நமது கடற்படையின் வலிமையை நேரில் பார்வையிட்டார் என்பது நினைவிருக்கலாம்.
இதற்கு முன்பு, முன்னாள் குடியரசுத் தலைவர்களான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் பிரதிபா பாட்டீல் ஆகியோர் முறையே ஜூன் 8, 2006 மற்றும் நவம்பர் 25, 2009 அன்று புனே அருகே உள்ள லோஹேகான் விமானப்படை தளத்தில் சுகோய்-30 MKI போர் விமானங்களில் சோதனைப் பயணங்களை (Sorties) மேற்கொண்டு சாதனை படைத்திருந்தனர். இந்த வரிசையில் தற்போது திரெளபதி முர்முவும் இணைந்துள்ளார்.
சமீபத்தில் இன்னும் ஒரு புதிய சாதனையையும் குடியரசுத் தலைவர் முர்மு படைத்திருந்தார். அதாவது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்ற முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற சாதனைதான் அது என்பது நினைவிருக்கலாம்.