இந்தியாவின் பொருளாதாரம் சீராக உள்ளது...பட்ஜெட் தொடர் உரையில் ஜனாதிபதி பெருமிதம்
டில்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் இன்று (ஜனவரி 28, 2026) தொடங்கியது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பல்வேறு நலத்திட்டங்களின் சாதனைகளை மையமாக வைத்து அவர் உரையாற்றினார். எதிர்க்கட்சிகளின் தொடர் அமல் மற்றும் முழக்கத்திற்கு இடையே ஜனாதிபதி தனது உரையை நிகழ்த்தினார்.
பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய நிலை :
2026-2027 ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 01ம் தேதியன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இதற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்கி உள்ளது. இதில் உரையாற்றிய ஜனாதிபதி திரெளபதி முர்மு கூறுகையில், உலக அளவில் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்கள் நிலவி வரும் சூழலிலும், இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் சீராகவும் உறுதியாகவும் உள்ளது. உலகின் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்வதை அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதன் மூலம் பொதுமக்களுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவு மிச்சமாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 2025-ஆம் ஆண்டில் மட்டும் 2 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத் துறை :
தொழில்நுட்பத் துறையில் இந்தியா மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. செல்போன் உற்பத்தியில் இந்தியா தற்போது உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள செல்போன்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, மின்சார வாகன (EV) உற்பத்தியிலும் இந்தியா சாதனை படைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் போக்குவரத்து கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றங்களை அவர் பட்டியலிட்டார்:
உலகின் 3-வது பெரிய மெட்ரோ ரயில் நெட்வொர்க் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் குக்கிராமங்கள் வரை இணைக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் அரசு மேற்கொண்ட மக்கள் நலத்திட்டங்கள் குறித்துப் பேசிய குடியரசுத் தலைவர், ஏழை மக்களுக்காக 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. உஜ்வாலா திட்டம் மூலம் 2 கோடி மக்களுக்கும் மேலாக இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் அடித்தட்டு மக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே மருத்துவ வசதிகள் சென்றடைந்துள்ளன.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்காக அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளின் விளைவாக, கடந்த ஆண்டில் 350 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இது நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.சமூக நீதிக்காக மத்திய அரசு தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பாடுபட்டு வருவதாகவும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்வதே இலக்கு என்றும் தனது உரையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் இந்த உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசிற்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன. இருந்தும் அவற்றை பொருட்படுத்தாமல் ஜனாதிபதி தனது உரையை நிகழ்த்தினார்.