மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
டெல்லி: மறைந்த போப் ஆண்டவர் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படும் நிலையில், அவரின் உடலுக்கு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். இன்று நாள் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (88) கடந்த ஏப்ரல் 21 அன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரின் இறப்பு செய்தி கேட்டு உலக நாடுகள் அனைத்தும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வந்தது.
போப் பிரான்சிஸ் உடல் தற்போது வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு வரை 2 லட்சத்து ஐம்பதாயிரம் பேர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் மறைந்த போப் பிரான்சிஸ் உடலில் செயிண்ட் மேரி மேஜரில் இன்று பிற்பகல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உலகத் தலைவர்கள் அனைவரும் குவிந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக இறுதிச் சடங்கு நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாடிகன் நகரத்திற்கு வருகை தருகின்றனர். அதேபோல்
இந்தியா சார்பில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, கிரண் ரிஜிஜு, மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் மற்றும் கோவா துணை சபாநாயகர் ஜோசுவா பீட்டர் டி சௌசா ஆகியோர் நேற்று வாடிகன் சென்றனர். இன்று போப் பிரான்சிஸ் உடலுக்கு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பூங்கொத்து வைத்து அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாடு சார்பில் அமைச்சர் நாசர், எம்எல்ஏ இனிகோ இதயராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுவதால் இந்தியா முழுவதும் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும். தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெற கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.