பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிவாயு விலை அதிரடி உயர்வு.. திகைப்பில் வாகன ஓட்டிகள்!

Su.tha Arivalagan
May 26, 2026,12:26 PM IST

சென்னை: வாகன ஓட்டிகளுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் வகையில், பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஆகியவற்றின் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் எரிபொருள் நிறுவனங்களின் புதிய அறிவிப்புகளின்படி இந்த விலை உயர்வு இன்று (மே 26, 2026) முதல் அமலுக்கு வந்துள்ளது.


சென்னையில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 5-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய புதிய அறிவிப்பின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 108.01-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இதேபோல், டீசல் விலையும் லிட்டருக்கு 23 காசுகள் அதிகரிக்கப்பட்டு, ஒரு லிட்டர் டீசல் ரூ. 99.78 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனையாகி வந்த நிலையில், இந்த புதிய உயர்வு நடுத்தர மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. இரண்டு வாரங்களில் 5 முறை விலை ஏற்றப்பட்டிருப்பது, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும் எனப் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.




பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மாற்று எரிபொருளான சிஎன்ஜி (Compressed Natural Gas) நோக்கி மாறிய வாகன ஓட்டிகளுக்கும் தற்பொழுது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. சென்னையில் சிஎன்ஜி எரிவாயுவின் விலை கிலோவுக்கு ரூ. 3.50 அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை ஒரு கிலோ சிஎன்ஜி எரிவாயு ரூ. 91.50 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த விலை உயர்விற்குப் பின் தற்பொழுது ஒரு கிலோ சிஎன்ஜி விலை ரூ. 95 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் இயங்கும் ஆட்டோக்கள், வாடகை கார்கள் (Cabs) மற்றும் சிஎன்ஜி ரகத் தனியார் வாகனங்கள் இந்த திடீர் விலை உயர்வால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன.


பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கவலை:


தொடர்ச்சியான இந்த விலை உயர்வு குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், "ஏற்கனவே வாழ்வாதாரச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல் விலை ரூ. 108-ஐத் தாண்டியிருப்பது பெரும் சுமையாகும். பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி பயன்படுத்தலாம் என்று நினைத்தால், அதன் விலையையும் ஒரே அடியாக உயர்த்தியிருப்பது கவலையளிக்கிறது. இது மறைமுகமாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கும் காரணமாக அமைந்துவிடும்" என்று தங்களது வேதனையைத் தெரிவித்துள்ளனர்.


எரிபொருட்களின் இந்த தொடர் விலை உயர்வு, போக்குவரத்துத் துறையினரையும், அன்றாடம் வேலைக்குச் செல்லும் சாமானிய மக்களையும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.