பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
டெல்லி: இன்று பிரதமர் மோடி தனது 75வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இன்று தனது 75வது பிறந்த நாளை கொண்டாடும் பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் தனது எக்ஸ் தள பக்கத்தில், எனது நண்பர் அதிபர் டிரம்ப் அவர்களே... எனது 75வது பிறந்தநாளில் உங்கள் தொலைபேசி அழைப்பு மற்றும் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
கடின உழைப்பிற்கு எடுத்துக்காட்டியாக இருந்து நாட்டிற்காக பெரிய இலக்குகளை விதைத்துள்ளீர்கள். நீங்கள் என்றென்றும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருக்கவும், உங்கள் தனித்துவமான தலைமையுடன் நாட்டை முன்னேற்றத்தின் பாதையில் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்லவும் நான் கடவுளிடம் பிரார்த்திக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
தியாகம் மற்றும் அர்ப்பணிப்பின் சின்னமாகவும், கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்கு உத்வேகமாகவும் இருக்கும் பிரதமர், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சமூக வாழ்வில் நாட்டு மக்களின் நலனக்காக இடைவிடாமல், சோர்வடையாமல் அயராது உழைத்து வரும் பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி
பிரதமர் நரேந்திர மோடி நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ எனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
உங்கள் தொலைநோக்கு தலைமையும், நாட்டிற்காக அர்ப்பணிப்பும், லட்சக்கணக்கான மக்களுக்கு ஊக்கமளிக்கிறது. நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், நமது நாட்டை வழிநடத்த தொடர்ந்து வலிமை கிடைக்க வாழ்த்துகிறேன்.
நடிகர் ரஜினிகாந்த்
மிகவும் மதிப்பிற்குரிய, மரியாதைக்குரிய என் அன்பான பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு நீண்ட ஆயுள்,நல்ல ஆரோக்கியம், மன அமைதி மற்றும் நமது அன்பான தேசத்தை வழிநடத்தும் நித்திய பலம் கிடைக்க வாழ்த்துகிறேன். ஜெய் ஹிந்த் என அதில் பதிவிட்டுள்ளார்.