விமான படை வீரர்களின் செயல்கள் நாட்டிற்கே பெருமை: பிரதமர் மோடி புகழாரம்!
ஆதம்பூர்: விமானப்படை வீரர்களின் வீரதீர செயல்கள் நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளது. நாட்டிற்காக தங்களது இன்னுயிரை தர வீரர்கள் தயாராக உள்ளனர் என்று பிரதமர் மோடி விமானப்படை வீரர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் மோதலின் போது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகளை தாக்கி அழித்ததில் விமானப்படையினர் முக்கிய பங்கு வகித்தனர். மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதத் தளங்களை இந்தியா தாக்குதல் நடத்தி அழித்தது. இதற்குப் பாகிஸ்தான் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. அந்த பதில் தாக்குதலை இந்தியா முறியடித்தது. இந்திய முப்படைகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்தியா நடத்திய தாக்குதலுக்கு பயந்து பாகிஸ்தான் பேச்சு வார்த்தை நடத்தியது. இருநாடுகளுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டது. இதனையடுத்து இருநாடுகளும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டனர்.
போர் நிறுத்தத்திற்கு இரவும், பகலும் பாடுபட்டு நாட்டை காத்த முப்படைகளுக்கும், ராணுவத்திற்கும் பிரதமர் மோடி தலைவணங்கியுள்ளார்.
இதனையடுத்து, இன்று பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு நேரில் சென்றார் பிரதமர் மோடி. தீவிரவாதிகளை ஒழிப்பதற்கான ஆபரேசன் சிந்தூரில் பங்கேற்ற வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். அதன்பின்னர் பிரதமர் மோடி அங்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், முப்படைக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். உங்களை பார்ப்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது. பயங்கரவாதத்தை மண்ணோடு மண்ணாக்கினீர்கள். நம்மை அழிக்க நினைத்தவர்களை நீங்கள் அழித்தீர்கள். பாகிஸ்தானின் தாக்குதலை நாம் வெற்றிகரமாக கையாண்டோம்.
இந்தியாவின் சேனைக்கு அவர்கள் சவால் விடுத்தனர்.நாட்டுக்காக தங்களது இன்னுயிரையும் தர வீரர்கள் தயாராக உள்ளனர். அணு ஆயுத பூச்சாண்டி இனிமேல் செல்லுபடியாகாது. விமானப்படை வீரர்கள் புது வரலாற்றை படைத்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் அச்சத்தில் உள்ளனர்.பயங்கரவாதிகள் இந்தியாவை மீண்டும் சீண்டினால் பேரழிவு நிச்சயம். பயங்கரவாதிகளின் இல்லத்திற்குள்ளேயே நுழைந்து தாக்கினோம். நமது ஏவுகணைகளை நினைத்து பாகிஸ்தான் தூக்கத்தை தொலைத்துவிட்டது. அவர்கள் இதயத்தை நாம் எப்போது துளைத்தோம் என்பது அவர்களுக்கே புரியவில்லை. பாகிஸ்தான் கேடயத்தில் கூட நாம் சிக்கிவிடவில்லை. மிகத்திறமையாகக் கையாண்டீர்கள். பாரத மாதாகி ஜே. உலகமே உங்களை பாராட்டுகிறது என்று பேசியுள்ளார்.