நடிகை பிரியா பவானி சங்கர் திருமணம்...நீண்ட கால நண்பரை கரம்பிடிக்கிறார்

Su.tha Arivalagan
Nov 11, 2026,12:40 PM IST

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர், தனது நீண்ட நாள் காதலரான ராஜ்பெல் ராஜை விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


சமீபத்தில் பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாரம்பரிய ஆடையில் மல்லிகைப் பூ மாலையுடன், ராஜ்பெல் ராஜுடன் அவர் இணைந்து இருக்கும் அந்தப் புகைப்படத்திற்குப் பின்னணியில் திருமண இசை ஒலிக்கப்பட்டிருந்தது. இது சமீபத்தில் நடைபெற்ற அவர்களின் நிச்சயதார்த்த விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், அவர்கள் திருமணப் பணிகளைத் தொடங்கிவிட்டனர் என்றும் சினிமா வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.




கல்லூரி காலத்தில் இருந்தே ஒருவரையொருவர் நன்கு அறிந்த பிரியா மற்றும் ராஜ்பெல் ராஜ், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் காதலித்து வருகின்றனர். எனினும், இந்த நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இவர்கள் இருவரும் இன்னும் வெளியிடவில்லை. செய்தியாளராகத் தனது பயணத்தைத் தொடங்கிய பிரியா பவானி சங்கர், பின்னர் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி, தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் ரவிதேஜாவுடன் இணைந்து வெளியான 'இருமுடி' (Irumudi) திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது.


தமிழில் 'ஹாட் ஸ்பாட் 2 மச்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அருள்நிதியுடன் இணைந்து நடித்துள்ள 'டிமான்டி காலனி 3' திரைப்படம் 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. மேலும், ஆதியுடன் இணைந்து நடித்த 'மரகத நாணயம் 2' படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இதுதவிர, ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் மற்றும் சித்தார்த் நடிக்கும் 'இந்தியன் 3' படத்திலும் அவர் நடித்துள்ளார்.


நீண்ட நாள் காதலருடன் பிரியா பவானி சங்கர் விரைவில் இணையவுள்ள செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.