குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!

Meenakshi
Apr 18, 2025,05:00 PM IST
சென்னை: சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

பல்வேறு பகுதிகளில் குழாய்களின் மூலமாக எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.  சுற்றுசூழலை பாதுகாக்கவும், இறக்குமதி செலவை குறைப்பதற்காகவும், இயற்கை எரிவாயுபயன்பாட்டை அதிகரிக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில், திருவள்ளூர் மாவட்டம் எண்ணணூர் துறைமுகத்தில் எல்என்ஜி எனப்படும் திரவ நிலை எரிவாயு முனையத்தை அமைத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் திரவ நிலையில் எரிவாயு இந்த முனையத்துக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குழாய் வழித்தடம் மூலம் எரிவாயு எடுத்துச் செல்வதற்காக குழாய் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.



இதன்படி, தமிழகத்தில் 2023ம் ஆண்டு நான்கு மாவட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தற்போது சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 48 கோடி மதிப்புள்ள இத்திட்டத்திற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. நீலாங்கரை, திருவான்மியூர், அடையாறு, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் குழாய்களை பதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 466 கி.மீ நீளத்திற்கு குழாய் அமைக்கப்படும் நிலையில் 260 கி.மீ ஆணைய பகுதிகளில் வருகிறது. ரூ.48 கோடி மதிப்பிலான குழாய் எரிவாயு திட்டத்தை டோரண்ட் கேஸ் நிறுவனம் செயல்படுத்த உள்ளது.